<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Wednesday, June 29, 2005
  ஸ்ரீரங்கனின் பதிவுக்கு ஒரு விளக்கம்.

ஸ்ரீரங்கன் அவர்கள், அநாமதேயமாகவும் பிறர் பெயரில் வந்தும் பின்னூட்டங்களிட்டு பிறரைத் துன்புறுத்துபவரைப் பற்றி பதிவொன்று எழுதியுள்ளார். அதில் பெடியன்கள் பதிவையும் குறிப்பிட்டுள்ளார்.

முகமூடியுடன் எழுதுவதில் சில சௌகரியங்கள் உள்ளன. எல்லோரையும் முகமூடியைக் கழற்றிவைத்துவிட்டு வா என்று சொல்ல முடியாது. அதைவிட இராயகரன் அவர்ளுக்கும் எமக்கும் பிரச்சினையே இல்லை. அவரது பெயரைக் கும்பல் என்ற சொல்லுடன் சேர்த்துச் சொல்லியது தவறென்று நாம் சொல்லிவிட்டோம். இதுபற்றி ஒரு பதிவு ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. மேலும் எமது குற்றச்சாட்டு இராயகரன் அவர்களுக்கோ அவரது சித்தாந்தங்களுக்கோ அவரது கருத்துக்களுக்கோ எதிரானதன்று. பிறகேன் வெளிப்படையாக இராயகரன் அவர்களின் கருத்துக்களை வாதிக்க வரச்சொல்லி அழைக்கிறீர்கள்?

அந்தப்பிரச்சினைபற்றி ஏற்கெனவே பதிவு போட்டாயிற்று. அங்கு சென்று சில விசயங்களைத் தெரிந்துகொள்ளவும். மாற்றாரின் பெயரில் பின்னூட்டமிடுவது மிகக் கேவலம் என்று சொல்லும் நீங்கள், அப்படி எமது பெயரில் உங்கள் பதிவில் பின்னூட்டமிடப்பட்டதால்தான் அந்தப் பதிவு எம்மால் எழுதவேண்டி வந்தது என்பதையும் உணர்ந்திருப்பீர்கள்.

ஸ்ரீரங்கன் எழுதியது: “பெடியன்களின் வருகைக்குப் பின் பற்பல மாறாட்டங்கள்இஅநாமதேயங்கள்-கருத்துக்கள் வந்தவண்ணமுள்ளன.இதன் வாயிலாகப் பின்னூட்டப் பெட்டிகள் யாவும் பதிவுசெய்த வாசகரையே அனுமதிக்கும் நிலைக்கு மாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.அனைவரும் கருத்தாடும் நிலை வலுவிழந்து போனவொரு சூழலில் எழுத்தினது பெறுமானம் வெறும் சிலருக்காக எழுத்தப்படும் நிலையில் ஆரோக்கியமானவொரு கருத்துநிலை வளர்வு இல்லாது போகின்றது.”
நீங்கள் சொல்லும் விளைவுகளனைத்தும் உண்மை. ஆனால் 'பெடியன்களின் வருகையின் பின்' என்று குறிப்பிட்டுள்ளதுதான் பிசகுகிறது. இந்தவியாதி சில மாதங்களுக்கு முன்பேயே வலைப்பதிவுகளில் ஆரம்பித்துவிட்டது. ரோசாவசந்தின் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டது முதல் இன்று வரை அது படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. டோண்டுவுக்கான பிரச்சினையும் எப்போதோ ஆரம்பித்துவிட்டது. பெடியன்கள் பதிவு ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் எம் வருகைக்குப்பின் எனக்குறிப்பிடுவது சரியா என்று சொல்லுங்கள்.

அநாமதேயப் பின்னூட்ட வசதி அடைக்கப்பட்டது யாரால்?
இதற்கும் பெடியன்கள் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?
அனைவரும் கருத்தாடும் நிலையை நாமும் வரவேற்கிறோம். அதிலும் அநாமதேயக் கருத்துக்கள் வசதியை முகமூடி போட்டிருக்கும் எங்களை விட யார் வரவேற்க முடியும்?
ஆனால் தவிர்க்கவியலாக் காரணங்களால் நாங்களும் அவ்வசதியை அடைத்துவைத்துள்ளோம். நீங்கள் தேவையற்ற விதத்தில் 'பெடியன்களின் வருகைக்குப்பின்’ எனப் பாவித்துள்ளீர்கள்.

எங்களைப்பற்றி நீங்கள் தீர்க்கமான ஒரு தீர்மானத்தில் இருக்கிறீர்கள். கொழுவியின் பதிவில் நாம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்று சொல்லியதிலிருந்து அதன் பின் நீங்கள் போட்ட பதிவுகளிலும் அடிக்கடி சுட்டிக்காட்டியமை இதற்குச்சான்று. இருந்தாலும் உங்கள் மேல் எமக்கு மரியாதையுண்டு. 'வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை' என்ற எம் பதிவில், எல்லோரும் எம்மைக் கோமாளிகளாகப் பார்த்தபோது, நீங்களும் சுந்தரவடிவேல் ஐயாவும் தான் எம்மை ஒரு பொருட்டாக மதித்து எதிர்ப்பையும் விமர்சனத்தையும் அளித்தீர்கள். (இதற்கிடையில் இனிமேல் எம்மைக் கண்டுகொள்ளப் போவதில்லையென்று சொல்லியுள்ளீர்கள். நாங்கள் எங்கே போவோம்? யார் இனி எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து கருத்துச்சொல்வார்கள்?;-(

வலைப்பதிவுகளை முடக்குதல் என்ற கதையை நாம் விட்டுவிடுகிறோம். கொழுவியின் வலைப்பக்கம் வேலை செய்கிறது. ஆனால் பதிவுகள் போடப்படாத காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலவேளை சுற்றுலா போயிருக்கலாம். அவர் வெளிநாட்டிலிருந்திருந்தால் இலங்கை சென்றிருக்கலாம். அதைவிடுத்து நாம் சொன்ன ஈழப்பிரச்சினைக்கான தீர்வுகள் விடயங்கள் பற்றி ஏதாவதுசொல்ல இருந்தால் சொல்லுங்கள். (ஏற்கெனவே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்வதாகச் சொல்லிவிட்டீர்கள்)

எங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லையென்று சொன்னாலும் உங்களுக்காகப் பதிலொன்று போடவேண்டிய கடமை எங்களுக்குண்டு. எங்களைப்பற்றிய உங்கள் ஆரம்பக் கண்ணோட்டத்தினடிப்படையில் நாங்கள் எவ்விதத்திலும் காரணமேயில்லாத பெயர்மாற்றப்பிரச்சினைக்கு எங்களை நோக்கிக் கைகாட்டியுள்ளீர்கள் என்பதைச் சொல்லி இப்பதிவை முடிக்கிறோம்.

குறிப்பு: (சே. உருப்படியா ஏதாவது எழுதுவோம் எண்டு வெளிக்கிட்டா இப்படிச் சிக்கலில போய் முடியுது. இனி நாங்களும், படங்கள் காட்டி, முதுகு சொறிஞ்சு, பட விமர்சனம் எழுதி, நையாண்டி பண்ணி, பிழைப்பைப் பாக்க வேண்டியதுதான்.)
நன்றி.
பாசமுடன்
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Tuesday, June 28, 2005
  பின்னூட்டமிடல் சம்பந்தமான பதிவு தொடர்பாக….

வேறொருவரின் பெயரில் பின்னூட்டமிடுவது சம்பந்தமாக இராயகரன் அவர்களின் பெயரை இணைத்து முன்பு எழுதிய பதிவு சம்பந்தமாகவும் அதற்குவந்த எதிர்வினைகள் சம்பந்தமாகவும் இப்பதிவை எழுதுகிறோம்.

இப்பிரச்சினை பெடியன்களுக்கு மட்டுமன்று, வேறு பலருக்கு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இறுதியாக பெடியன்களுக்கு நடந்துள்ளது. பெடியன்களின் பெயரில் வேறு தளங்களில் பின்னூட்டங்கள் இடப்பட்டுவந்தது. எமது தளத்திலும் எமது பெயர்களைப் பாவித்தே சில பின்னூட்டங்களும் வந்திருந்தன. ஸ்ரீரங்கனின் பதிவில் எமது பெயரைப் பாவித்து மிக நீண்டவொரு பின்னூட்டம் இடப்பட்டிருந்தது. அது இராயகரன் அவர்களின் இன்னும் வெளிவராத “வதை முகாமிலிருந்து தப்பி தூக்குமேடைக் கைதியின் நினைவு அழிவதில்லை” என்ற புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

எம் பதிவுகளிலும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்கள் ஒட்டப்பட்டன. அவை பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் இருந்தன. ஒரு படம் போட்ட விளையாட்டுப் பதிவிற்கூட பாசிசம், சோசலிசம், பூர்சுவா வர்க்கம், வர்க்கப்போராட்டம் என்று ஒரு சொற்கூட்டம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்குச் சற்று நையாண்டியாகப் பின்னூட்டமிட்டபோது, அது வேலன் அவர்களால் இடப்படவில்லையென்றும், முடிந்தால் அவற்றை வைத்து வாதிக்கும்படியும் சொல்லப்பட்டது. இதென்ன கேலிக்கூத்து? சம்பந்தமேயில்லாமல் எங்கிருந்தோ சொற்களை வெட்டி ஒட்டுவது, பின் அதுசம்பதமாக வாதிக்கச்சொல்லிக் கேட்பது. ஒட்டப்பட்ட அனைத்திலுமே ஒரே தொனிதான். ஒரே நோக்கம் தான்.

பின் அதேவேலை எமது பெயர்களில் மற்றவர்களின் பதிவுகளில் நடந்தது. ஸ்ரீரங்கனின் பதிவிலிடப்பட்ட சர்ச்சைக்குரிய அப்பின்னூட்டம் பின் ஸ்ரீரங்கனால் அழிக்கப்பட்டுள்ளது. ரவி ஸ்ரீநிவாஸ், குமிழி போன்றவர்களின் பதிவுகளிலும் எம் பெயரைப் பாவித்து அதே சொற்கூட்டங்கள் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் ஏற்கெனவே வலைப்பதிவுகளில் பலரையும் அலைக்கழித்துக்கொண்டிருக்கும் அநாமத்துத்தான் இந்தவேலையும் செய்கிறது என்று நாம் கருதினோம். அந்தக் கோபத்தில் எழுதப்பட்ட பதிவுதான் அது. அதில் தலைப்பு உறுத்தவே, உடனடியாக தலைப்பை மாற்றினோம். ஆனால் தமிழ்மணம் செயலியில் முதல் எழுதப்பட்ட தலைப்புத்தான் இப்போது வரை தெரிகிறது. கும்பல் என்ற வார்த்தையை இராயகரன் அவர்களுடன் சம்பந்தப்படுத்தி எழுதியது தவறென்று ஒத்துக்கொள்கிறோம். அனால் இந்த பெயர்மாற்றுப் பின்னூட்டமிடுபவர்களை அவ்வாறு சொன்னதில் எந்தத் தவறுமில்லையென்றே நாம் நினைக்கிறோம். இதைவிடக் கடுமையான வார்த்தைகள் மற்றவர்களால் அவர்களையிட்டுப் பாவிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக சிலர் கண்டனங்கள் தெரிவித்திருந்தீர்கள். திரும்பவும் சொல்கிறோம், கும்பல் என்ற சொல்லை இராயகரன் அவர்களுடன் இணைத்து எழுதப்பட்டதுதான் வருந்தத்தக்கது. சிலர் கேட்டதுபோல் எழுதப்பட்டது தொடர்பாக வாதிக்க நாம் வரவில்லை. அந்தளவுக்கு எமக்கு ஞானம் இல்லையென்றே எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினை என்னவென்றால், எம் பெயரில் அப்பின்னூட்டம் இடப்பட்டதுதான். இதற்கும் அந்தப்பின்னூட்டக் கருத்தை வாதிப்பதற்கும் என்ன சம்பந்தம்? கண்டனம் தெரிவித்த எவரும் பெயர் மாற்றிப் பின்னூட்டமிட்டதைப் பற்றிக் கதைக்கவேயில்லை. சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கன் அவர்கள்கூட அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏதோ தேவையில்லாமல் இப்பிரச்சினை எம்மால் கிழப்பப் பட்டதுபோன்று தோற்றம் தருகிறது நிலைமை.

ஏற்கெனவே வலைப்பதிவுகளில் மற்றவர்களின் பெயர்களில் பின்னூட்டமிடுபவரும் இந்தப்பிரச்சினைக்குக் காரணமாயிருப்பவரும் ஒருவராயிருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம். எப்படி டோண்டுவின் பெயரில் விளையாடியவர், டோண்டுவுக்கு எதிரியாகவும் பார்ப்பண வெறுப்பாளராகவும் குறிப்பிட்ட நோக்கம் கொண்டவராகவும் பார்க்கப்படுகிறாரோ, அதேபோல் எம் பெயரில் பின்னூட்டங்களையிட்டவரும் ஓரளவு அப்பின்னூட்டங்கள் சார்ந்து பார்க்கப்படலாம். அந்த வழியில்தான் நாம் அப்பதிவை எழுதினோம். அத்தோடு வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து என்ற வாக்கியம் தான் இன்னும் சிக்கலுக்குரியதாக இருந்தது, இருக்கிறது.

இதுபற்றி மேலும் விவாதிப்பது சிக்கல்தான். இராயகரன் அவர்களின் பெயரை அக்கும்பலோடு சம்பந்தப்படுத்தி எழுதியதற்கு எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்தைக் கருத்தால் வெல்லுங்கள், முடிந்தால் அக்கருத்துக்களை வாதிடுங்கள், போன்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக வைக்கப்படுகின்றன. இராயகரன் அவர்களும் அப்படிப்பட்ட ஒரு தோரணையில்தான் பின்னூட்டியுள்ளார். ஐயா! எந்தக்கருத்தானாலும் அதை மற்றவனின் பெயரில் (அதுவும் அக்கருத்துத் தொடர்பாக விமர்சனம் கொண்டிருப்பவரின்) அவற்றைப் பின்னூட்டமாயிடுவது தான் இங்கே சிக்கல். அதுசம்பந்தமாகத்தான் இந்தப் பிரச்சினை எழுந்தது. அதை வைத்தே கருத்துத் தெரிவியுங்கள்.
(பொறுமையாகவும், நிதானமாகவும் சிக்கலை அணுகிய இராயகரன் அவர்களுக்கு நன்றி.)

நன்றி.
பாசமுடன்,
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Monday, June 27, 2005
  பெயர் மாற்றக் கும்பல் பிடிபட்டது.

ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரைப் பயன்படுத்தி பின்னூட்டமிடப்படுகிறது. அது தீவிர புலியெதிர்ப்பு வாதமாக இருக்கிறது. எதையும் எழுதிவிட்டுப்போங்கள். ஆனால் ஏன் எமது பெயரைப் பயன்படுத்திப் பின்னூட்டமிட வேண்டும்? இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புலனாகிறது. அதை சகல வலைப்பதிவருக்கும் தெரிவிக்கிறோம்.

அப்பின்னூட்டம் வெளிவராத இராயகரனின் புத்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அப்பின்னூட்டம் இராயகரன் கும்பலினால் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களினால் தான் போடப்பட்டிருக்க வேண்டும். இந்த கேடு கெட்ட செயலைச் செய்வது புலியெதிப்பு என்பதை மட்டுமே மனப்பாடமாகக்கொண்ட ஒரு கும்பல் என்பது தெளிவு. எம் பதிவிலும் அவர்கள் பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள். இப்போது எம் பெயரைப் பாவித்து இப்பின்னூட்டம் ஸ்ரீரங்கனின் பதிவில் போடப்பட்டுள்ளது.

டோண்டு மற்றும் சிலரின் பெயர்களில் பின்னூட்டமிட்டவர்களும் இவர்களே என நாம் சந்தேகிக்கும் நிலையுள்ளது. புலியெதிர்ப்பை மட்டுமே கருத்தாக்கமாகக் கொண்ட மனநோய் பிடித்த அக்கும்பலே டோண்டு போன்றவர்களின் பெயர்களிலும் பின்னூட்டமிட்டு இவ்வளவு மன உளைச்சலுக்கும் காரணமாயிருந்தது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மற்ற வலைப்பதிவாளர்களும் யார் பிறர் பெயரில் பின்னூட்டமிடும் அந்த அநாமத்து என்பதை இனங்கண்டுகொள்ள ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளதை வைத்துப் புரிந்து கொள்ள முடியும்.

பெடியன்கள் பதிவில் எழுதும் நாம் அந்தப்பெயர்களில் எந்த வலைப்பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லையென்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆகவே பெடியன்கள் பெயரில் எந்தப் பதிவில் பின்னூட்டமிடப்பட்டாலும் அது போலியானதே.இராயகரனுடனோ அவர் சார்ந்த குழுவுடனோ அறிமுகமிருப்பவர்கள், (ஸ்ரீரங்கனுக்கு இருக்குமென்று நினைக்கிறோம்.) இந்தப் பின்னூட்ட விசயத்தைத் தெளிவுபடுத்தலாம். வெளிவராத ஒரு புத்தகத்திலிருந்து பத்திகள் பின்னூட்டமாக இடப்படுகிறதென்றால் எப்படி கருத முடியும்?

இதற்குச் சரியான தீர்வு கிடைக்காத வரை இணையத்தில் புலியெதிர்ப்பைச் செய்யும் குறிப்பிட்ட ஒரு கும்பலின் (அவர்களின் மொழியில் சொன்னால்தான் புரியும்) வேலைதான் இந்த பெயர் மாறாட்டம் என்றுதான் நாம் (மற்ற வலைப்பதிவாளர்களும்) நினைக்க வேண்டிய நிலையிலுள்ளோம். எனவே முகமூடி கிழிந்தபின்னும் இந்த வேலை செய்யவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Sunday, June 26, 2005
  எம் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் பற்றி

சில வலைப்பதிவுகளில் எம் பெயரைப்பாவித்துப் பின்னூட்டங்கள் இடப்பட்டுள்ளன. ரவிஸ்ரீநிவாஸ், ஸ்ரீரங்கன் மற்றும் குமிழிஆகியோர் உட்பட சில பதிவுகளில் இது நடந்துள்ளது. ஒரே பின்னூட்டத்தை பிரதி பண்ணி எல்லா இடத்திலும் ஒட்டியுள்ளது இந்த அநாமத்து. மற்றவர்களின் பெயர்களிலும் இந்த வேலை நடைபெற்றுள்ளது. ஆகவே மீண்டும் தெளிவுபடுத்துகிறோம். இந்தப்பின்னூட்டங்களுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை.

மேலும் நாம் யாரினதும் பதிவுகளில் பின்னூட்டமிடுவதில்லையென்பதையும் சொல்லிக்கொள்கிறோம் (சில பாதுகாப்புக் காரணங்களுக்காக). எனவே டோண்டு, ரோசா செய்வதைப்போல பின்னூட்டங்களை எமது பதிவில் போடத்தேவையில்லை. எங்கள் பெயரில் ஏதாவது பின்னூட்டங்கள் உங்கள் பதிவுகளில் வந்தால் அவை எம்மால் இடப்படவில்லையென்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


  ஈழப்பிரச்சினைக்கான தீர்வு -2.

முழு உலகத்துக்குமானதும் கூட.

ஏற்கெனவே நாம் இது பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளோம். அனைவரும் புத்த மதத்தைத் தழுவுவது என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால் அதிலும் சில நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதை நாம் கண்டுள்ளோம். அதில் யாரோ (இது பதிவரின் பெயர்) சொன்னதுபோல் தமிழ்ப்பௌத்தன் சிங்களப்பௌத்தன் என்ற பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அதை நிவர்த்தி செய்வதும், மேலும் தனியே ஈழத்துக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் பல சிக்கல்களைத் தீர்க்கக்கூடியதுமான ஒரு தீர்வு பற்றி இப்போது பார்ப்போம்.

முதலில் இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏறத்தாள எழுபத்திரண்டு சதவீதம் பேர் சிங்களத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள். ஆனால் சிங்களத்தைப் பேசுபவர்கள் என்று பார்த்தால் ஏறத்தாள எண்பத்தைந்து சதவீதத்துக்கும் மேல். புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே சிங்களத்தைப் பேசாதவர்கள். ஏனைய பிரதேசங்களில் (தமிழர்கள் கூட) பெரும்பாலும் எல்லோருமே சிங்களம் பேசக்கூடியவர்கள். (வவுனியா மற்றும் மன்னாரில் குறிப்பிட்டளவானோர் சிங்களம் பேசத் தெரியாதவர்கள்) கொழும்பிலுள்ள தமிழர்களையோ முஸ்லீம்களையோ (முஸ்லீம்கள் தமிழர்களல்லர் என்பது என் கருத்து) எடுத்துக்கொண்டால், அவர்கள் சிங்களம் பேசுவார்கள். சொல்லப்போனால் தமிழைவிட சிங்களமே அவர்களின் அன்றாடப் பேச்சுமொழியாக இருக்கும்.

ஆக, மிகமிகப் பெரும்பான்மையோரால் பேசப்படும் மொழி சிங்களம். (சிங்களவர் யாரும் தமிழ் பேசுவதில்லை. பேச முயற்சிப்பதுமில்லை.) தமிழ் பேசுவோரும் தமிழ் பேசவேண்டிய கட்டாயத்திலிருப்போரும் மிகமிகச் சொற்பமே.

இலங்கையின் பிரச்சினை மொழிவாரியாகவே தொடங்கப்பட்டது. ஆனால் இடையில் அது திசை திரும்பி தமிழர்களுக்குத்தான் பிரச்சினை என்ற தொனியில் வந்துவிட்டது. (தமிழைத் தாய்மொழியாக்கொண்ட ஒரு சமூகம் தாம் தமிழர்கள் என்று அடையாளங்காணப்படுவதை வெறுத்துக் கொண்டது.) தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது முதல், தரப்படுத்தல் சட்டம் வரை, மொழி தான் பிரச்சினையாக இருந்தது. (ஆங்கிலத்திலே பரீட்சையெழுதியிருந்தாலும், சிங்களவர், தமிழர்கள் என்றால் அந்த இனத்துக்குரிய வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகம் போக முடியும். (1971) ஆனால் இச் சட்டம் தமிழர்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்தது என்று சொல்வதெல்லாம் அவ்வளவு சரியல்ல. விகிதாசார அடிப்படையில்தான் இடங்கள் ஓதுக்கப்பட்டன.) சிங்களம் கற்றிருந்தால்தான் வேலை வாய்ப்பு என்ற பிரச்சினைகள் எழுந்ததெல்லாம் மொழியை வைத்துத்தானே ஒழிய வேறில்லை.

ஆகவே மொழிதான் இனப்பிரச்சினையின் தோற்றுவாய். பெரும்பான்மையோர் பேசும் மொழியை எல்லாரும் பேச முயல்வது இலகுவானதுதான். அப்படிப் பேசமுடியும்போது ஏராளமான சிக்கல்கள் குறைந்துவிடுகின்றன. நாடு முழுவதும் ஒரே மொழி பாவனையில் இருந்தால் நல்லதுதானே. குறிப்பாக அரசகரும மொழியாக ஒரே மொழியைப்பாவித்தால் எந்தச்சிக்கலும் தோன்ற வாய்ப்பில்லை. இந்த இனப்பிரச்சினையும் எழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இலங்கையில் அனைவரும் சிங்களத்தைப் பேசக் கற்றுக்கொள்வதுடன் அதை (மட்டுமே) அரச கரும மொழியாகப் பாவிப்பதும் இனப்பிரச்சினையைத் தீர்க்க எளிய வழி.

இந்தத் தீர்வை இலங்கையில் மட்டுமன்று, எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். எமக்கு மிக அண்மையில் இருக்கும் இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே இந்தியை அனைவரும் பயின்றாலே இந்தியாவின் பாதிச்சிக்கல்கள் குறைந்துபோய்விடும். அது பலமொழிகளைப் பேசும் நாடாக இருப்பதால் தான் அது இன்னும் உலகில் 'நம்பர் ஒண்' வல்லரசாக வர முடியவில்லை. இந்தியை அனைவரும் பேசத் தொடங்கினால் இந்தியா வல்லரசாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நாடு முழுவதும் 68 மொழியை வைத்திருக்காமல் ஒரே மொழியைப்பாவிப்பதன் மூலம் நிர்வாக விரைவாக்கம் நடைபெறும். மேலும் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து வளங்களைப்பிரித்து முடக்க வேண்டிய தேவையில்லை. மாநிலத்துக்கு மாநிலம் சண்டைபோட வேண்டிய தேவையில்லை. மொழிவாரி மாநிலங்கள் தனி நாடாக மாறிவிடுமோ என்று இந்தியா அஞ்சத் தேவையில்லை. பல மொழிகளாகச் சிதறிக்கிடக்கும் இந்திய சினிமா ஒரே மொழிக்கு மாறுவதன் மூலம் உலகின் அதி உன்னத சினிமாத்தளமாக மாறும். பெரும் சந்தை வாய்ப்பைப் பெறும்.

எனவே இந்தியாவில் ஒரு மொழியே எல்லோரும் பாவிக்கும் நிலை வரவேண்டும். இதன்மூலம் தார்பூசும், பெயர் மாற்றும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லாமற் போகும். அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். இதேபோல் இலங்கையிலும் சிங்களத்தை அனைவரும் பேசத் தொடங்குவதூடாக இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம். பல மொழிகளைக்கொண்ட இந்தியாவை விட ஒப்பீட்டளவில் இரு மொழிகளை மாத்திரமே கொண்ட இலங்கையில் இத்திட்டம் மிக இலகுவாக நடைமுறைப்படுத்தப்படலாம்.

இங்கே, ஒரே மொழியைப் பேசத்தொடங்குதல் என்று சொல்லியிருந்தோம். ஆனால் தனியே பேசத்தொடங்குதல் மட்டும் பூரண பலன் தராது. தமது பழைய தாய்மொழியைக் கைவிட வேண்டும். சிங்களம் பேசிக்கொண்டு அதே நேரம் தமிழையும் பேசிக்கொண்டிருந்தால் ஏதோ ஒரு வழியில் தாம் தமழர்கள் என்ற அடையாளத்தைப் பேணிக்கொண்டிருப்பார்கள். படிப்படியாக தம் பழைய தாய்மொழியை மறந்துவிட வேண்டும். இது ஆரம்பத்தில் கடினமாயிருந்தாலும் முயற்சித்தால் சாத்தியப்படக் கூடியதே. அதேபோல் இந்தி பேசத்தெரிந்தும் தமிழையும் வைத்துக்கொண்டிருந்தால் இது நிரந்தரத் தீர்வாகாது. இந்தி மட்டுமே தெரியும் என்ற நிலை எப்போது எல்லோருக்கும் வருகிறதோ, அன்றுதான் இத்திட்டத்தின் பூரண வெற்றி அடங்கியுள்ளது. அதுபோலவே இலங்கையிலும்.

குறிப்பாக தாய்மொழியில் வாசிக்கும் திறமையை இழக்கும் போதே எமது பாரம்பரியக் குணங்களும் மாறிவிடுகின்றன. பழைய நூல்களில் எமக்குச் சொல்லப்பட்ட எம் வரலாற்றையும் எம் வீரம், தீரம் போர் முறைகள், பெருமைகள் என்பவற்றையும் அறிந்துகொள்ளும் ஆற்றலை இழக்கிறோம். இதுதான் இன ஐக்கியமாதலின் முக்கிய அம்சம். அதன்பின், நாம் கடாரம் வென்றோம் என்றோ, நாம் தான் பூர்வ குடிகள் என்றோ, யாரும் சண்டை போட மாட்டோம். எல்லாம் மறந்து ஜோதியில் ஐக்கியமாகி விடுவோம்.

இந்தியாவிலும் இந்தி மட்டுமே அனைவருக்கும் தெரியும் என்ற நிலைவரும் போது, அந்த மொழிமூலமான வரலாறே அனைவருக்கும் போதிக்கப்படும். ஆதலால், திராவிடர்தான் மூத்தகுடியென்றோ, ஆரியர் ஏதோ கால்வாய் வழி வந்தவரென்றோ, தமிழர் இமயம் வென்றவரென்றோ, சரஸ்வதி ஆற்றுப்படுக்கை என்பதெல்லாம் பொய்யென்றோ யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. அனைவரும் ஒரே கொள்கையுடனும், ஒரே வரலாற்றறிவுடனும் இருப்பர். வீண் சண்டைகள் வராது. மிகுதி மொழிகளெல்லாம் செத்த மொழிகள் என்ற இலக்கணத்துள் அடைக்கப்பட்டுவிடுமாகையால் அதன் இலக்கியம், வரலாறுகள் கூட யாரும் படிக்கப்போவதில்லை. (சமஸ்கிருதம் மட்டும் எப்போதும் வாழும்).

ஆனாலும் இதிலும் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக ஈழத்தமிழனான நான் சிங்களத்தில் எழுதும் ஒரு பதிவை, இந்தியர்கள் படிக்கமுடியாது. இப்படி நாட்டுக்குள் ஒரு மொழியைக் கொண்டு வருவதால் நாட்டுக்குள் மட்டுமே பிரச்சினைகள் இல்லாமல் போகும். ஆனால் பிராந்தியங்களில் சிக்கல்கள் இருந்துகொண்டேயிருக்கும். நாடுகளுக்கிடையில் சண்டைகள் இருக்கும். ஆகவே உலகம் முழுவதும் பொதுப்படையாக ஒரே மொழியை ஏற்றுக்கொள்ளுதல் மிகச்சிறந்த நிவாரணம். இப்போதைய நிலையில் ஆங்கிலம் அந்தப்பாத்திரத்தை வகிக்கலாம். ஆங்கிலம் மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில் மிகச்சுலபமாக நிறையச் சிக்கல்களைத் தீர்க்கலாம். என்ன ஒரு சிக்கலென்றால், நாம் ஏற்கெனவே இத்தளத்தில் தமிழில் எழுதிய எம் தத்துவங்களையும் சிந்தனைகளையும் மீண்டும் எழுதவேண்டி வரும். அதுமட்டுந்தான் இப்போதைய தமிழர்களின் இழப்பு. அவ்வளவுதான்.

இதுபற்றி நிறைய எழுத ஆவல். ஆனால் ஏற்கெனவே கட்டுரை நீண்டுவிட்டதால் இன்னொருமுறை இதை வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
இக்கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை எதிர்பார்க்கிறேன். இப்போதைக்குத் தமிழிலேயே எழுதுங்கள்.

நன்றி.
பாசமுடன்,
-குட்டான்- PhD,MRCP,MRCS,Dipl.Ed,Dipl.Scl.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Thursday, June 23, 2005
  ஈழப்பிரச்சினைக்கான தீர்வு -1

வலைப்பதிவாளருக்கு அழைப்பு.

இது மிகவும் சிக்கலான கருதான். ஆனால் நிச்சயம் கலந்துரையாடப்பட வேண்டி கரு. இப்படியே இருப்போமானால் இந்த இனப்பிரச்சனைக்கு எப்படி முடிவு காண்பது?
ஆகவே உடனடியாக நாம் ஏதாவது செய்தே ஆகவேண்டிய தேவையில் இருக்கிறோம். ஆகவே இந்த வலைப்பதிவில் ஈழப்பிரச்சினைக்கான தீர்வைக்காணவும் அது பற்றி ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கவும் சகல வலைப்பதிவாளரையும் அழைக்கிறேன். முதலில் என் தீர்வைக் கூறுகிறேன்.

இதற்கான தீர்வென்பது மிகச்சுலபமானது. பக்கத்திலேயே தீர்வை வைத்துக்கொண்டு இவ்வளவுகாலம் ‘தேவையற்ற’ போரை நடத்திக்கொண்டுள்ளோம். முதலில் மனத்தில் சாந்தி வரவேண்டும். அமைதி குடிகொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது கூடாது. உணர்ச்சிவசப்பட்டு எங்கள் உரிமைகள் பறிபோகிறதென்று கூச்சல் போடக்கூடாது. எதையும் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். ஆசைகளை அடக்கப்பழகிக்கொள்ள வேண்டும். குறிப்பாக எங்களுக்கும் மற்றவன்போல் சலுகைகள் (இதை உரிமைகள் என்றும் சிலர் சொல்வர்) வசதிகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் ஆசை கொள்வதும் தவறான மனப்பான்மை.

இவ்வளவு பண்புகளையும் தமிழ் மக்களிடம் கொண்டுவரவேண்டும். அதை ஆன்மீகத்தால் மாத்திரமே செய்ய முடியும். மக்களை ஆன்மீக வழியில் நடத்திச்செல்ல உரிய தலைமை தமிழர்களிடம் இப்போது இல்லை. கம்பன் கழகமூடாகச் செய்யப்பட்ட அத்திருப்பணியும் சில புல்லுருவிகளால் இடைநிறுத்தப்பட்டது. இப்போது அவர்கள் கொழும்பில் செயற்படுவதைக்கூட பொறுக்க முடியாமல் அவர்களுக்குக் கல்லெறிய வேண்டுமென்று கொக்கரிக்கிறார்கள். அவர்கள் திருப்பணி செய்யும் கொழும்பில் ஏதாவது பிரச்சினையுள்ளதா? போராட வேண்டிய தேவையுள்ளதா? மக்கள் துன்பப்படுகிறார்களா?
இல்லையே. எல்லோரும் சுமுகமாகத்தானே வாழ்கிறார்கள். அதுபோல் வடக்குக் கிழக்கிலும் தமிழ் மக்களிடம் ஆன்மீகத்தை விதைக்கக்கூடிய அமைப்புக்கள் தோன்ற வேண்டும். அதற்கான ஏதுநிலைகள் தற்போது தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது மகிழ்ச்சிகரமான செய்தி.

திருகோணமலையிலும் ஓமந்தையிலும் புத்தர் சிலைகள் தோன்றுவது நல்ல அறிகுறி. தமிழர்களை ஆன்மீகம் நோக்கியும், முதற்பந்தியில் நாம் கூறிய குணங்களை அம்மக்களிடத்திற் கொண்டு வருவதற்காகவும் இந்தப் புத்தர் சிலைகள் அரும்பங்காற்றும் என்று நாம் அனுமானிக்கிறோம். உண்மையில் தமிழர்களுக்கு இருக்க வேண்டுமென்று மேலே நாம் கூறிய அனைத்தும் மக்களிடம் போய்ச் சேர சிறந்த ஊடகம் புத்தமதம் என்பது எம் நிலைப்பாடு. புத்தர் தான் ஆசையைத் துறக்கச்சொன்னார். அவரின் வழியில் சென்றால் எந்தப்பிரச்சினையையும் தீர்த்துவிடலாம். இலங்கைப்பிரச்சினைக்கு பௌத்தம் தான் காரணம் என்று பலர் பசப்புகிறார்கள். உண்மையில் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க புத்த மதமே சிறந்தவழியென்பது எம் முடிவு.

பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது? கொஞ்சப்பேர் புத்த மதம் அல்லாதவர்களாக இருப்பதால் தானே? அனைவரும் புத்த மதத்தைத் தழுவிவிட்டால்?..
யோசித்துப்பாருங்கள், ஏதாவது பிரச்சனை இலங்கையில் வருமென்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. அனைவரும் புத்தமதத்தைத் தழுவிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சினையென்ற கதைக்கே இடமில்லை. அதன்பிறகு உரிமைப்பிரச்சனையெல்லாம் இருக்காது. ஆசைகள் இருக்காது. எல்லோரும் சந்தோசமாக இருக்கலாம். எமக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து நிம்மதியாக இருக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம், இணையம் வழியே அலட்டலாம், எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கும், நல்ல வீதிகள் போடப்படும், எல்லோரும் சினிமா பாக்கலாம். எவ்வளவு அனுபவிக்கலாம். (இதையெல்லாம் ஆசை என்று சொல்ல முடியாது.)

இப்போது திருகோணமலையிலும் ஓமந்தையிலும் தோன்றிய புத்தர் சிலைகள் வடகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் தோன்ற வேண்டும். (இவை புத்தபெருமானால் தான் நிறுவப்படுகின்றன என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதால் நான் அதைச் சொல்லவில்லை).
இந்த வழிமுறைமூலம் ஏனையோரையும் புத்த மதத்தைத் தழுவச்செய்வதன் மூலம் பல தசாப்தங்களாக நிலவிவரும் கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், இனப்பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

எனவே இப்போது நாம் செய்யவேண்டிது, புத்தர்சிலைகள் அமைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதும், அனைவரையும் புத்த மதத்துக்கு மாறச்சொல்லி பரப்புரை செய்வதும் தான். சுனாமிப் பொதுக்கட்டமைப்பைவிட முக்கியமான பணி இவைதான். இவ்வளவுகாலமும் எமது சக்தியையும் நேரத்தையும் வீணடித்தது போதும். இனியும் உறங்க முடியாது. இவ்வளவு சுலபமான வழிமுறையிருக்க, எங்கெல்லாமோ தீர்வு தேடி அலைகிறோம்.

புத்தர்சிலை தோன்றுவதைப்பற்றி நான் சொன்னது பலருக்குப்பிடிக்காமலிருக்கலாம். எமது சகோதர இணையத்தளமான தேனி இது பற்றிக் கட்டுரையொன்று எழுதியுள்ளது. பாசிசப் புலிகளிடமிருந்து தம்மைப்பாதுகாக்கவே திருமலைத் தமிழ் மக்கள் புத்தர் சிலையிடம் சரணடைகிறார்கள் என்றும், புத்தர் சிலைக்கு எதிரான போராட்டமென்பது புலிகளின் பிரச்சாரமேயொழிய எந்தத் தமிழ்மகனுக்கும் புத்தர் சிலையை எதிர்ப்பதில் சற்றும் விருப்பமில்லையென்றும் அதில் ஆணித்தரமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே புத்தர் சிலையமைப்பதை எதிர்ப்பது புலிகள் தாம், மக்களல்ல என்பதைப் புரிந்துகொண்டீர்களென்றால் நான் கூறிய ஆலோசனையிலுள்ள சாத்திப்பாடும் உண்மையும் புரியும்.

இது சம்பந்தான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
சாத்தியப்பாடான மேலுமொரு தீர்வு பற்றி நாளை எழுதுவேன். அது தனியே ஈழப்பிரச்சினைக்கு மட்டுமன்றி உலகம் முழுவதுக்குமான பல சிக்கல்களைக்கும் தீர்வாக அமையுமென்று நம்புகிறேன்.
அதைப்பற்றிப் பிறகு.

பாசமுடன்,
-குட்டான்-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Tuesday, June 21, 2005
  யாரென்று தெரிகிறதா? புதிர்-1

இப்படத்தில் நிற்பவர் யாரென்று தெரிகிறதா?
எந்நேரமும் சிரித்துக்கொண்டிருப்பவர், அபூர்வமாக சிரிக்காமல் நின்றபோது பிடிக்கப்பட்ட படமிது. ஆகவே அபூர்வப் புகைப்படங்கள் வகைக்குள் அடங்குகிறது. இப்போது உலகமட்டத்தில் பிரபலமானவர், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட படமென்பதும் குறிப்பிடத்தக்கது.



கண்டுபிடிப்பவர்களுக்கு, இப்படத்தைத் தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


  ஊரத் தெரிஞ்சுக்கிட்டன் உலகம் புரிஞ்சுக்கிட்டன்



- புதியோன்
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


  வீரவணக்கம் - சங்கர்ராஜி

ஈழத்துத் தோழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஈரோஸ் EROS இயக்கத்தின் இராணுவத் தளபதி சங்கர்ராஜி அவர்கள் ஜனவரி மாதம் 10 ம் திகதி மாரடைப்பினால் மரணமானார். கொள்கை வேறுபாடுகள் பல இருந்தாலும், கருத்து முரண்பாடுகளும் அதனால் உண்டான மனக்கசப்புகளும் இருந்தாலும் ஈழத் தோழர்களின் போராட்டத்தில் மறக்க முடியாத ஒருவராக தன்னை ஆக்கிக்கொண்ட சங்கர்ராஜி என்கிற அந்த விடுதலைப் போராளிக்கு நாமும் எமது இயக்கத்தின் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்கர்ராஜி

ஈரோஸ்(EROS) சங்கர் எனவும், சங்கர்ராஜி எனவும் இலங்கை அரசியலில் நன்கு அறியப்பட்ட இவரது மரணம் எம்மை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி இலங்கையில் பிறந்த இவர், அங்கிருந்து இலண்டனுக்கு இடம்பெயர்ந்து தனது கல்வியைக்கற்று, பின் FORD நிறுவனத்தில் பொறியியலாளராக கடமைபுரிந்து வந்த இவர், 1976 முதல் அரசியலில் நுளையத் தொடங்கியிருந்தார். அன்று முதல் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாகத் தடங்களைப் பதிந்து வந்த வேளை சனவரி மாதம் 10ம் திகதி அன்று மாரடைப்பினால் மரணமான செய்தி எம்மை துன்பத்திற்கு உள்ளாக்கியது. இவரது வாழ்வின் சுமார் 30 வருட காலம் இலங்கை அரசியல் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதில் எதுவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. இத்தருணத்தில் அவரது கடந்த கால அனுபவங்களிலிருந்து அவசியமான பக்கங்களை இங்கு நினைவுகூர வேண்டிய கடமைக்கு நாம் உள்ளாகியுள்ளோம்.

1970 களில் இனவாதத் தரப்படுத்தல் மேலோங்கி நின்ற வேளை இலங்கையில் இருந்து தமிழ் இளைஞர்கள் இடம் பெயர்ந்து இலண்டன் நோக்கி புறப்பட்டிருந்த காலமது. எமது சமுதாயம் கொழும்பு பொருளாதாரத்தை மையமிட்ட தன் செயற்பாடுகளுக்கு மாற்றீடாக ஐரோப்பிய பொருளாதாரம் நோக்கி தன் மையத்தை இடம்பெயர வைத்த நேரமது. எமது தேசிய இனமானது தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி அதற்கான கருவடிவங்களை உருவாக்கி வந்திருந்த வேளையில் இலங்கையிலும், இங்கிலாந்திலும் போராட்டம் குறித்தான சிந்தனைகள், அணுகுமுறைகள், அமைப்புகள் உருவாகத் தொடங்கியிருந்தன. புலம்பெயர்ந்து வந்தவர்கள் மீண்டும் தம் தாய்நாடு சென்று அடக்கு முறைகளை எதிர்கொண்டு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த நிலையில் ஈரோஸ் இயக்கம் இரட்னசபாவதி அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது. இவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சங்கர்ராஜி அவர்கள் 1976 முதல் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தயாரானார். அகிம்சைவழி போராட்டத்தின் அஸ்தமனத்தை புரிந்துகொண்ட ஈரோஸ் இயக்கம் ஆயுதப்போராட்டத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தி வந்தது. சங்கர்ராஜி அவர்கள் இராணுவப்பயிற்சி நெறிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தயாரானார். இவ்வாண்டில் லெபனான் நகருக்குச் சென்று அங்கு யாசிர் அரபாத் தலைமையிலான „பத்தா“(FATAH) அமைப்பின் இராணுவப்பயிற்சியை பெற்றுக்கொண்டார். சங்கருக்கு போரியல் உபாயங்கள் பற்றியும் இராணுவக்கட்டமைப்புகள் பற்றியும் மற்றும் அரசியல் இராணுவ துறைசார்ந்த திட்டமிடல்கள் பற்றியும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அப் பயிற்சி நெறிகளை "பத்தா" அமைப்பின் இராணுவத்தளபதியாக இருந்த அமரர் அபு.ஜிகாத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர் பெற்றுக்கொண்டது இவர் வாழ்க்கையின் ஒரு சிறப்பு அம்சமாகும். இவரது லெபனான் பயணம் பற்றியும், பயிற்சிகள் பற்றியும், அனுபவங்கள் பற்றியும் அபு.ஜிகாத் அவர்களது மறைவை ஒட்டி எழுதிய நூலில் சங்கர் அவர்கள் பல விடயங்களை எமக்கு அறியத்தந்துள்ளார். „எந்த வகைப் போராட்டத்திற்கும் முதலில் உங்கள் பலத்தை நீங்கள் நம்பவேண்டும்“ என்ற அபு.ஜிகாத் அவர்களது வாக்கியத்தை நினைவு கூர்ந்து அதன்படி செயல்பட முன்வந்தவர் சங்கர்ராஜி ஆவார்.

இவரது ஆழுமையின் கீழ் ஈரோஸ் இயக்கமானது தனது செயற்பாடுகளை வெளிநாடுகளிலும், தமிழகத்திலும், ஈழத்தின் பலபாகங்களிலும் மேற்கொள்வதற்கான முடிவுகளைப் பெற்றிருந்தது. இதன்படி ஈழத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு தயாரான நிலையில் இருந்த இளைஞர்களுக்கு லெபனான் பயிற்சி வாய்ப்பை வழங்கும் முடிவை மேற்கொண்டிருந்தது. இம் முடிவை செயற்படுத்துவதற்காக சங்கர்ராஜி அவர்கள் ஈழத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். இலங்கை சென்றவர் 1977 இல், அன்று புதிய தமிழ்புலிகள் என்ற பெயரில், அதற்கு தலைமை தாங்கி நெறிப்படுத்தி வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சந்தித்து இப்பயிற்சி உதவிபற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். பேச்சுவார்த்தையின் பலனாக புதிய தமிழ்ப்புலிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பப்பயிற்சிகள் லெபனானில் வழங்கப்பட்டிருந்தன.

1977 இல் இலங்கையில் பாரிய கலவரமானது மூண்டபோது இலங்கைப் பிரச்சினையானது சர்வதேசம் எங்கும் அறியப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஈரோஸ் இயக்கம் 1978 இல் வவுனியாவிற்கு அருகில் கண்ணாட்டி என்னும் இடத்தில் „கூட்டுப் பண்ணை“ ஒன்றை அமைத்து தனது பொதுவுடமை கருத்தின் மாதிரி வடிவம் ஒன்றை ஸ்தாபித்திருந்தது. இப்பண்ணையில் சங்கர்ராஜி அவர்கள் தனது பயிற்சி மற்றும் அனுபவங்களை புதிய ஈரோஸ் உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். பின்னர் பண்ணையானது சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சங்கர்ராஜி அவர்கள் இலங்கை அரசின் தேடப்படும் நபர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். அக்காலம் முதல் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஆரம்பமாகியிருந்தது. ஆயினும் அவற்றை துச்சமென மதித்து அவர் தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.

1980 களில் ஈரோஸ் இயக்கமானது கட்சிப்பிளவு ஒன்றை சந்தித்திருந்தது. இக்கட்சிப்பிளவின் போது இலங்கைக்கு மீண்டும் வந்திருந்த சங்கர்ராஜி அவர்கள் அப்பிளவை தடுக்கும் முகமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இருக்கவில்லை. ஈரோஸ் அமைப்பின் தலைமைத்துவம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிலர் பிரிந்து சென்று EPRLF என்னும் பெயரில் புதிய அமைப்பு ஒன்றை ஸ்தாபித்துக்கொண்டனர். எப்போதும் தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டுவதில் முன்நின்று உழைத்த சங்கர்ராஜி அவர்கள் இப்பிளவு குறித்து மிகவும் மனம் வருந்திய நிலையிலேயே காணப்பட்டிருந்தார்.

1983இல் மீண்டும் இனக்கலவரமானது பாரிய அளவில் இலங்கையில் தோன்றிய போது இந்தியாவின் தலையீடும் புதிய பரிமாணத்தில் உதயமாகியிருந்தது. இந்த அரசியல் பாய்ச்சலைக் கருத்தில் கொண்டு சங்கர்ராஜி அவர்கள் இலண்டனிலிருந்த தன் இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். அங்கிருந்தபடியே ஈரோஸ் அமைப்பின் தலைமைத்துவத்தின் முடிவுகளை செயற்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இக்காலங்களில் பெருமளவு உறுப்பினர்கள் பயிற்றுவிக்கப்பட்டு ஸ்தாபனமயப்படுத்தப்பட்டனர். 1984 இல் சென்னையில் கூடிய ஈரோஸின் மத்திய குழுவானது ஈழத்திலும், வெளிநாடுகளிலும் எங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புக்களை நிறுவியிருந்தது. இவ்வேளை ஈரோஸ் அமைப்பின் இராணுவத் தளபதியாக இவர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவரது நெறிப்படுத்தலின் கீழ் இராணுவ தந்திர உபாயங்களும், இராணுவரீதியான செயற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டன. தென்னிலங்கையில் பொருளாதார இலக்குகளை நோக்கிய தாக்குதல்களுக்கும், வடகிழக்கில் தற்காப்பு ரீதியிலான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இவர் தனது நெறிப்படுத்தலை மேற்கொண்டிருந்தார். இவரது நெறிப்படுத்தலில் வடகிழக்கிலும், மலையகப்பகுதிகளிலும், கொழும்பிலும் ஈரோஸ் இயக்கம் வேகமாக காலூன்றத் தொடங்கியது. இக்காலங்களில் இராணுவத்துறையை மட்டுமல்லாது நிதி மற்றும் சர்வதேச தொடர்புகளையும் சுமந்தவராக சங்கர்ராஜி அவர்கள் காணப்பட்டார். பாரிய பொறுப்புக்களை சுமந்ததின் நிமித்தம் பல்வேறு வசைமொழிகளுக்கும் ஆளானார். இராணுவச் செயற்பாடுகளில் இவர் களம் காணாதவர் என்ற குற்றச்சாட்டுக்கு இவர் இலக்கானார். ஈழத்தில் செயற்பட்டு வந்த தோழர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப இவர் 1986 இல் ஈழம் வந்து கொழும்பு வரை சென்று களநிலைகளை சந்தித்துச் சென்றார்.

1985 இல் இந்திய அரசு ஈழத்தமிழர் விவகாரத்தில் புதிய அணுகுமுறை ஒன்றை கொண்டு வந்தது. தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசுடன் பேசவைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளை ஈரோஸ் அமைப்பின் சார்பாக சங்கர்ராஜி அவர்களின் தலைமையிலான குழு இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டிருந்தது. திம்புப் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏகமனதாக ஒரு பொதுநிலையை எய்தி நான்கு அடிப்படை அம்சங்களில் இலங்கை அரசிற்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இக்காலத்தில் சங்கர்ராஜி அவர்கள் இயக்க ஐக்கியம் குறித்தான அவசியத்தை எண்ணக்கருவாக கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தார். சில மாதங்களின் பின்னர் திம்புப் பேச்சுவார்த்தையானது முறிவடைந்த பின்னர் மீண்டும் ஈழத்தில் யுத்தம் ஆரம்பமாகியிருந்தது.

1986 களில் இந்திய அரசானது விடுதலை இயக்கங்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஒன்றை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையை அணுகுவது என்ற அடிப்படையில் அவர்கள் செயற்பட முடிவு செய்தனர். இதன்படி 1986 இல் பெங்களூரில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் பேச்சுவார்த்தையானது இந்திய அரசின் அனுசரணையில் நடைபெற்று இருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழீழ விடுதலைப் புலிகளினூடாக அணுகி தீர்வு ஒன்றைக் காண்பது என்ற இந்தியாவின் புதிய நிலைப்பாடானது மாற்று இயக்கங்கள் மத்தியில் குழப்பங்களை தோற்றுவித்திருந்தது.

இவ்வேளையில் ஈரோஸ் இயக்கமானது இவ்வணுகுமறையை ஆதரித்து செயற்பட தீர்மானித்திருந்தது. இது தொடர்பாக சங்கர்ராஜி அவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இருக்கும் தேசிய தலைமையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டதன் வைபவமாக இச் சம்பவத்தை வர்ணித்து, இனி வரும் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்து தீர்வுகளை காண விளைவதை தாம் ஆதரிப்பதாக கருத்துக்கூறியிருந்தார். இவ்வேளை இது ஒரு பாரிய பொறுப்பென்றும் ஏனைய சக போராட்ட அமைப்புக்களை தனது தலைமையின் கீழ் இணைத்து செயற்படும் பக்குவம் இவ்வமைப்புக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். ஈரோஸ் இயக்கத்தின் இம்முடிவு மாற்று இயக்கங்களுக்கு ஈரோஸ் மீது வெறுப்பையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருந்தது. 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தமானது ஏற்பட்ட போது மீண்டும் இலங்கை அரசியலில் அனர்த்தங்கள் நிகழத் தொடங்கின. இலங்கை-இந்திய ஒப்பந்தமானது இலங்கை மக்களுக்கு இடைக்கால தீர்வை முன்மொழிந்து அதனை விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நிறுவ ஆவன செய்திருந்தது. இவ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை சங்கர்ராஜி அவர்கள் ஆதரித்து செயற்பட்டமை ஈரோஸ் இயக்கத்தின் இராணுவ – அரசியல் துறை சார்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விரக்தியையும் கசப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் இனிமேல் அமைதி நிரந்தரமாக நிலவும் என அதீத நம்பிக்கை கொண்டு இவர் செயற்பட்டதன் விளைவாக பல எதிர்ப்புக்களை சந்திக்கும் நிலமைக்கு உள்ளாகியிருந்தார். இது அவருக்கு பெரும் சோதனைக்காலமாக அமைந்திருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜேவர்த்தனா சூழ்ச்சியோடு தனக்கு சாதகமாக கையாண்டதன் விளைபலனாக இந்தியஅரசு இலங்கை தமிழர்களை பகைத்துக் கொண்டது. அமைதி காக்க வந்த இந்தியப்படைக்கும் - விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்த நிலை உருவானபோது மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கைத்தமிழர் இந்தியா குறித்து அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.

நெருக்கடி மிகுந்த இச் சூழ்நிலையில் ஈரோஸ் இயக்கம் மிருசுவிலில் தன் திட்ட பிரகடன மகாநாட்டை ஆரம்பித்திருந்தது. அம்மகாநாட்டில் ஆயுத ஒப்படைப்பு குறித்து தான் பெற்ற முடிவை தவறானது என்று ஒப்புக்கொண்ட தோழர் சங்கர், இது குறித்து வருத்தம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு விடயங்களிலும் தனது நம்பிக்கை கருத்துக்களை முன்மொழிந்திருந்தார். பல்வேறு அரசியல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட இம்மகாநாட்டின் இறுதியில் மீண்டும் ஈரோஸ் தோழர்களினால் சங்கர்ராஜி அவர்கள் இராணுவத் தளபதியாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 பெப்ரவரியில் இலங்கையில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் ஈரோஸ் இயக்கம் 13 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியிருந்தது. இந்திய அரசினால் நிறுவப்பட்ட மாகாண சபையின் செயற்பாடுகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது அமைந்திருந்தது.

இவ்வெற்றியின் பின்னர் கொழும்பில் சங்கர்ராஜி தலைமையில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று நடத்தப்பட்டிருந்தது. ஈரோஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை சங்கர்ராஜி அவர்கள் தெளிவுபட கூறியிருந்தார். இந்திய இராணுவமானது யுத்தத்தை நிறுத்தி அமைதியான ஒரு சூழ்நிலையில் விலகலை செய்வதற்கான ஒரு கால எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார். இந்திய இராணுவமானது 1990 இன் ஆரம்பத்தில் வெளியேறிய பின்னர் ஈரோஸ் பல்வேறு உள்நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கியிருந்தது. இயக்கத்தின் உள் முரண்பாடுகளினால் தனிப்பட்ட முறையில் பாதிப்படைந்த அவர் அரசியல் முன்னெடுப்புகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தார். இக் காலகட்டங்களில் அவர் சென்னைக்கு இடம் பெயர்ந்திருந்தார்.

1990 இன் நடுப்பகுதியில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டபோது ஈரோஸ் இயக்கத்தின் பொதுச்செயலாளராக விளங்கிய பாலகுமாரன் ஈரோஸின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக பத்திரிகைகளுக்கு அறிவிப்பு செய்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மலையகப் பகுதிகளிலும் செறிந்து இருந்து செயற்பட்டு வந்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தினரால் மோசமான பாதிப்பிற்கும், உயிர் ஆபத்துக்கும் உள்ளாகியிருந்தனர். இவ்வேளை மீண்டும் சங்கர்ராஜி அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தார்.

மலையகம் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி செயற்பட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். சிறை வைக்கப்பட்டிருந்த இவ்வுறுப்பினர்களை விடுவிக்கவும், அரசியலில் இருந்து ஒதுங்கி நாட்டைவிட்டு வெளியேற தயாரான உறுப்பினர்களுக்கு உதவும் முகமாகவும் கொழும்பில் மையமிட்டு தன் செயற்பாடுகளை அவர் ஆரம்பித்திருந்தார். இக்காலங்களில் சங்கர்ராஜி அவர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் பத்திரிகைகளால் அரசசார்பு நபராக வர்ணிக்கப்பட்டார். கொழும்பில் தங்கியிருந்த இக்காலங்களில் விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் தொடர்புகளை பேணி ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத்திற்கு அயராது உழைத்து வந்தார். இவரது முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்காத நிலையில் மீண்டும் மனவிரக்தியுடன் சென்னைக்கு திரும்பி அங்கு தங்கியிருந்தார். தன் அரசியல் செயற்பாடுகளை கட்டுப்படுத்திக் கொண்ட அவர் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002ம் ஆண்டு பெப்ரவரியில் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஐக்கியம் பற்றிய இவரது எண்ணங்களுக்கு விடை கிடைக்கும் என ஏங்கி நின்றார். அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்ற அவரது விருப்பம் ஈடேறியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் மத்தியில் மாற்றியக்கங்கள் தொடர்பாக ஏற்பட்ட கொள்கை மாற்றத்தை வரவேற்ற அவர் அனைவரையும் ஒன்று திரட்டி செயற்படுத்தும் காலத்திற்காக ஏங்கி நின்றார். இறுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் புனர்வாழ்வு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தயாரானார். இப்பேரழிவில் சிக்குண்ட தமிழ்ச் சமூகத்தை உறுதியான பொருளாதாரத் திட்டங்கள் மூலம் மீண்டும் கட்டியெழுப்ப தன்னார்வம் கொண்டிருந்தார். அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிபந்தனையற்ற முறையில் செயற்பட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால்… அவரது உடல்நிலை அவரது ஆயுளை துரிதப்படுத்தியது. நீரிழிவு நோயாலும், இரத்தக் கொதிப்பினாலும் பல ஆண்டுகளாக அவஸ்தைப்பட்டு வந்த இவர் 10.01.2005 அதிகாலையில் தன் தாய்மடியில் மாரடைப்பால் மரணமானார்.

சுமார் முப்பதாண்டு கால அரசியல் வரலாறு கொண்ட சங்கர், அறிந்தவர்களுக்கு அரசியல் நல்வழிகாட்டியாகவும், அறியாதவர்களுக்கு சர்ச்சைக்குரிய நபராகவும் விளங்கியவர் என்பதே யதார்த்தம்.

வீரவணக்கத்துடன்
பெடியன்'கள்

 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


  வால் பிடிக்கும் உரித்துடமை.

இப்போது வலைப்பதிவுகளில் ஒரு தொனி தோன்றியுள்ளது. அதுதான் புலிக்கு வால்பிடிக்கும் தொனி. என்ன பிரச்சினையெண்டா, அத எல்லாரும் செய்ய வெளிக்கிடுறதுதான்.

குழப்பியின் பதிவில் நரி பற்றி அவர் ஏதோ எழுத, அதில் அவரே எதிர்பார்க்காத வகையில் புலிக்கு ஆதரவாக கோசங்கள் கேட்கிறது. இதைவிட மற்றப்பதிவுகளிலும் பதிவு எழுதுபவரைவிட பின்னால் கேட்கும் கோசங்கள் நன்றாக வால்பிடிக்கின்றன. இங்கு உரிமைப்பிரச்சினையும் உண்டு. சரியான உரித்துடமை இல்லாமல் பலர் இந்தப் பணியைச் செய்கின்றனர் என்பதுதான் கவலைக்கிடமானது.

உண்மையில்,
சயந்தன்,
ஈழநாதன்,
வசந்தன்,
குழைக்காட்டான்,
இளைஞன்,
வன்னியன்,
குழப்பி பற்றித்தனியாகச் சொல்லத்தேவையில்லை. மேற்சொன்ன யாரோ ஒருவருக்குள் அவர் வந்துவிடுவார்.

ஆகியோர் மட்டுமே புலித் தோத்திரம் சொல்ல முழுமையான அனுமதி பெற்றவர்கள். சட்ட ரீதியான உரித்துடமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் ஏதாவது வாழ்த்துப்பா பாடலாம். புகழ்ந்து நாலு வார்த்தை பேசலாம். (அதுகூட தார்மீக அடிப்படையில் கொடுக்கப்பட்ட சலுகையே) ஆனால் மேற்குறிப்பிட்டவர்களைத் தாண்டிச்செல்லாதவாறு இருப்பது அவசியம்.

இங்கே என்ன நடக்கிறதென்றால், பலர் தங்கள் பெயரையும் சொல்லாமல் உரித்துடையவர்களையும் விட அதிகளவில் துதிபாடகின்றனர். இது சட்டரீதியில் தவறானது என்பதுடன் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

எனவே இனிமேல் இவ்வகையான தவறுகளை இழைப்போர் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.

-முனியன்-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


  நாங்கள் தீவிரவாதிகள் தான்

தீவிரவாதிகள். ஆம்!

நாங்கள் தீவிரவாதிகள் தான்

பிறந்தவுடனே தாயின்
மார்பு கடித்து
குருதி குடித்த
நாங்கள் தீவிரவாதிகள் தான்

வளரும்போது தந்தை
நெஞ்சு மிதித்து
காலால் உதைத்த
நாங்கள் தீவிரவாதிகள் தான்

''''

வெஞ்சினங் கொண்டெழுந்தோம்
வேட்கை தீர்க்கப் புறப்பட்டோம்
அஞ்சிக் கிடக்க கோழைகளல்லர்
ஆளப் பிறந்த நாம் தமிழ்ச் சாதி

கொஞ்சிக் குலவி தினம் கூத்தடிக்க
கொள்கை மறந்த கொடியர் அல்லர்
நெஞ்சு விரித்துப் போர் புரிவோர்
நேரெதிர் நின்று மறமொலிப்போர்

''''

அழுத்தி அழுத்தி நிலத்துள் புதைத்தால்
முளைத்து முளைத்து வெளியே வருவோர்
அழித்து அழித்து எமை எரித்தால்
விழித்து விழித்து வெறி கொண்டெழுவோம்

''''

நாங்கள் தீவிரவாதிகள் தான்
நாங்கள் தீவிரவாதிகள் தான்
நாங்கள் தீவிரவாதிகள் தான்

தொடரும்....

- புதியோன்
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Monday, June 20, 2005
  வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை

வணக்கம் தோழர், தோழியரே!
நாம் இன்றுதான் தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டோம். வந்தவுடனேயே சில வேலைகளைச் செய்யவேண்டிய தேவையிலுள்ளோம். அதாவது எம்மைப்பற்றியும் எம் பலத்தைப்பற்றியும் உங்களுக்குப் புரியவைக்கவுள்ளோம். எமது முதற்கட்டமாக சில வலைப்பதிவாளர்களுக்கு எமது எச்சரிக்கையை மணியை அடித்துள்ளோம்.

ஈழநாதன் எனும் பெயரில் கண்டதையும் உளறும் ஒருவரின் ஒரு தளத்தை நாம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
அதே போல் 'தராகி பதிவு' என்ற பெயரில் ஏதோ வெட்டிப் பிடுங்குவோம் என்று சிலர் தளமொன்றை நிறுவினர். பின் இரு மாதங்களாக யாரும் சீந்துவாரின்றி இருக்கிறது அத்தளம். எந்தப் புதிய விடயங்களும் ஏற்றப்படவில்லை. சும்மா பேருக்கென நிறுவப்பட்ட அத்தளத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

மற்றவர்களுக்கும் எச்சரிக்கை:

அநாவசியமான, தரக்குறைவான பதிவுகளை எழுதும் வலைப்பதிவாளர்களின் தளங்கள் எமது தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை அறியத் தருகிறோம்.
எனவே ஒழுங்காக நல்ல பிள்ளைகளாக பதிவுளைப்போடுமாறு எமது இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இது எச்சரிக்கை மட்டுமன்று, கட்டளை! கட்டளை! கட்டளை!
எமது பலத்தைக் காட்டவே இது. வெறும் முன்னோட்டம் தான்.

அப்ப வரட்டுங்களா தோழர்களே, தோழியரே!
(இயக்கம் எண்டு வந்திட்டா இப்படியான பெயருகளிலதான் மற்றாக்களக் கூப்பிட வேணுமெண்டு முன்னோர் சொல்லியிருக்கினம்.)
இப்படிக்கு,
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


  இன்று இல்லெங்கிலும் நாளை

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன
எங்கள் இமைகள் கவிந்துள்ளன
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக
எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக

-சண்முகம் சிவலிங்கம்-
நன்றி: மரணத்துள் வாழ்வோம்.


எங்கேயோ கேட்ட மாதிரியிருக்கா?
'கன்னத்தில் முத்தமிட்டால்' இல் மாதவன் இழுத்துச் செல்லப்படும்போது சொல்லும் கவிதை தான் இது.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


  இரு கவிதைகள்.

போரின் புதல்வர்கள்.

அவனது திருமண இரவில்
அவர்கள் அவனைப் போருக்கு
அழைத்துச் சென்றனர்.

கடுமையான ஐந்து வருடங்கள்.

சிகப்புத் தள்ளுவண்டியொன்றிற் படுத்தவாறு
ஒருநாள் அவன் நாடு திரும்பினான்.
அவனது மூன்று புதல்வர்கள்
அவனைத் துறைமுகத்திற் சந்தித்தனர்.


சுவர்க்கடிகாரம்

எனது நகரம் எதிரியிடம் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

எனது சுற்றாடல் வீழ்ந்தது.
எனது பாதையும் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

எனது வீடும் வீழ்ந்து நொருங்கிற்று.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

பின்னர் சுவரும் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
டிக் டிக் என்று ஓடிக்கொண்டேயிருக்கிறது.

***சமீஹ் அல் காசிம்
பலஸ்தீன அரபுக் கவிஞர்களில் ஒருவர்.
தமிழில் -எம்.ஏ.நுஹ்மான்.***
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Sunday, June 12, 2005
  வணக்கம்

வணக்கம்.
உலகத்தில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சிலரின் குரல்கள்தான் இப்பதிவு.
'தமிழ்த் தீவிரவாதிகள்' என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட நாங்கள் இப்போது தமிழ்மணத்தில் வந்து தஞ்சம் அடைந்திருக்கிறோம்.
இங்காவது எங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள் என நம்புகிறோம்.
பதிவுகளைப் பாருங்கள். படியுங்கள். உங்கள் கருத்துக்களைத் தவறாமல் எழுதுங்கள்.
எம்மோடு வாதிப்பதால் நாம் யாரையும் கொல்ல மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.
இப்படிக்கு,
முனியன்,
உம்மாண்டி,
புதியோன்.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது