பின்னூட்டமிடல் சம்பந்தமான பதிவு தொடர்பாக….
வேறொருவரின் பெயரில் பின்னூட்டமிடுவது சம்பந்தமாக இராயகரன் அவர்களின் பெயரை இணைத்து முன்பு எழுதிய பதிவு சம்பந்தமாகவும் அதற்குவந்த எதிர்வினைகள் சம்பந்தமாகவும் இப்பதிவை எழுதுகிறோம்.
இப்பிரச்சினை பெடியன்களுக்கு மட்டுமன்று, வேறு பலருக்கு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இறுதியாக பெடியன்களுக்கு நடந்துள்ளது. பெடியன்களின் பெயரில் வேறு தளங்களில் பின்னூட்டங்கள் இடப்பட்டுவந்தது. எமது தளத்திலும் எமது பெயர்களைப் பாவித்தே சில பின்னூட்டங்களும் வந்திருந்தன. ஸ்ரீரங்கனின் பதிவில் எமது பெயரைப் பாவித்து மிக நீண்டவொரு பின்னூட்டம் இடப்பட்டிருந்தது. அது இராயகரன் அவர்களின் இன்னும் வெளிவராத “
வதை முகாமிலிருந்து தப்பி தூக்குமேடைக் கைதியின் நினைவு அழிவதில்லை” என்ற புத்தகத்திலிருந்து எடுத்துப் போடப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
எம் பதிவுகளிலும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்கள் ஒட்டப்பட்டன. அவை பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் இருந்தன. ஒரு படம் போட்ட விளையாட்டுப் பதிவிற்கூட பாசிசம், சோசலிசம், பூர்சுவா வர்க்கம், வர்க்கப்போராட்டம் என்று ஒரு சொற்கூட்டம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்குச் சற்று நையாண்டியாகப் பின்னூட்டமிட்டபோது, அது வேலன் அவர்களால் இடப்படவில்லையென்றும், முடிந்தால் அவற்றை வைத்து வாதிக்கும்படியும் சொல்லப்பட்டது. இதென்ன கேலிக்கூத்து? சம்பந்தமேயில்லாமல் எங்கிருந்தோ சொற்களை வெட்டி ஒட்டுவது, பின் அதுசம்பதமாக வாதிக்கச்சொல்லிக் கேட்பது. ஒட்டப்பட்ட அனைத்திலுமே ஒரே தொனிதான். ஒரே நோக்கம் தான்.
பின் அதேவேலை எமது பெயர்களில் மற்றவர்களின் பதிவுகளில் நடந்தது. ஸ்ரீரங்கனின் பதிவிலிடப்பட்ட சர்ச்சைக்குரிய அப்பின்னூட்டம் பின் ஸ்ரீரங்கனால் அழிக்கப்பட்டுள்ளது. ரவி ஸ்ரீநிவாஸ், குமிழி போன்றவர்களின் பதிவுகளிலும் எம் பெயரைப் பாவித்து அதே சொற்கூட்டங்கள் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் ஏற்கெனவே வலைப்பதிவுகளில் பலரையும் அலைக்கழித்துக்கொண்டிருக்கும் அநாமத்துத்தான் இந்தவேலையும் செய்கிறது என்று நாம் கருதினோம். அந்தக் கோபத்தில் எழுதப்பட்ட பதிவுதான் அது. அதில் தலைப்பு உறுத்தவே, உடனடியாக தலைப்பை மாற்றினோம். ஆனால் தமிழ்மணம் செயலியில் முதல் எழுதப்பட்ட தலைப்புத்தான் இப்போது வரை தெரிகிறது. கும்பல் என்ற வார்த்தையை இராயகரன் அவர்களுடன் சம்பந்தப்படுத்தி எழுதியது தவறென்று ஒத்துக்கொள்கிறோம். அனால் இந்த பெயர்மாற்றுப் பின்னூட்டமிடுபவர்களை அவ்வாறு சொன்னதில் எந்தத் தவறுமில்லையென்றே நாம் நினைக்கிறோம். இதைவிடக் கடுமையான வார்த்தைகள் மற்றவர்களால் அவர்களையிட்டுப் பாவிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக சிலர் கண்டனங்கள் தெரிவித்திருந்தீர்கள். திரும்பவும் சொல்கிறோம், கும்பல் என்ற சொல்லை இராயகரன் அவர்களுடன் இணைத்து எழுதப்பட்டதுதான் வருந்தத்தக்கது. சிலர் கேட்டதுபோல் எழுதப்பட்டது தொடர்பாக வாதிக்க நாம் வரவில்லை. அந்தளவுக்கு எமக்கு ஞானம் இல்லையென்றே எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினை என்னவென்றால், எம் பெயரில் அப்பின்னூட்டம் இடப்பட்டதுதான். இதற்கும் அந்தப்பின்னூட்டக் கருத்தை வாதிப்பதற்கும் என்ன சம்பந்தம்? கண்டனம் தெரிவித்த எவரும் பெயர் மாற்றிப் பின்னூட்டமிட்டதைப் பற்றிக் கதைக்கவேயில்லை. சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கன் அவர்கள்கூட அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏதோ தேவையில்லாமல் இப்பிரச்சினை எம்மால் கிழப்பப் பட்டதுபோன்று தோற்றம் தருகிறது நிலைமை.
ஏற்கெனவே வலைப்பதிவுகளில் மற்றவர்களின் பெயர்களில் பின்னூட்டமிடுபவரும் இந்தப்பிரச்சினைக்குக் காரணமாயிருப்பவரும் ஒருவராயிருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம். எப்படி டோண்டுவின் பெயரில் விளையாடியவர், டோண்டுவுக்கு எதிரியாகவும் பார்ப்பண வெறுப்பாளராகவும் குறிப்பிட்ட நோக்கம் கொண்டவராகவும் பார்க்கப்படுகிறாரோ, அதேபோல் எம் பெயரில் பின்னூட்டங்களையிட்டவரும் ஓரளவு அப்பின்னூட்டங்கள் சார்ந்து பார்க்கப்படலாம். அந்த வழியில்தான் நாம் அப்பதிவை எழுதினோம். அத்தோடு வெளியிடப்படாத புத்தகத்திலிருந்து என்ற வாக்கியம் தான் இன்னும் சிக்கலுக்குரியதாக இருந்தது, இருக்கிறது.
இதுபற்றி மேலும் விவாதிப்பது சிக்கல்தான். இராயகரன் அவர்களின் பெயரை அக்கும்பலோடு சம்பந்தப்படுத்தி எழுதியதற்கு எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்தைக் கருத்தால் வெல்லுங்கள், முடிந்தால் அக்கருத்துக்களை வாதிடுங்கள், போன்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக வைக்கப்படுகின்றன. இராயகரன் அவர்களும் அப்படிப்பட்ட ஒரு தோரணையில்தான் பின்னூட்டியுள்ளார். ஐயா! எந்தக்கருத்தானாலும் அதை மற்றவனின் பெயரில் (அதுவும் அக்கருத்துத் தொடர்பாக விமர்சனம் கொண்டிருப்பவரின்) அவற்றைப் பின்னூட்டமாயிடுவது தான் இங்கே சிக்கல். அதுசம்பந்தமாகத்தான் இந்தப் பிரச்சினை எழுந்தது. அதை வைத்தே கருத்துத் தெரிவியுங்கள்.
(பொறுமையாகவும், நிதானமாகவும் சிக்கலை அணுகிய இராயகரன் அவர்களுக்கு நன்றி.)
நன்றி.
பாசமுடன்,
-உம்மாண்டி-