<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Thursday, August 11, 2005
  இலங்கை இந்திய இணைப்பு.

இன்று வலைப்பதிபவர்களிற் பெரும்பான்மையானோர் இந்தியாவையும் இலங்கையையும் தம் தாய்நாடாகக் கொண்டவர்களே. ஆகவே பலரும் பேசத் தயங்குகின்ற அல்லது பேசப் பயப்படுகின்ற ஒரு விடயத்தைப் பற்றி நான் இப்போது பேசப்போகிறேன்.

இன்று எம்முன்னாலுள்ள ஒரு பாரிய சவால் அவுஸ்திரேலியா தான். கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் யாரும் அசைக்க முடியாமலுள்ள ஒரே நாடு இதுதான். அதனால் அதற்கு ஆணவம் அதிகரித்து விட்டது. எந்த அணியோடு மோதினாலும் தான் தான் வெற்றி பெறுவேன் என்ற இறுமாப்பில் திரிகிறது அவ்வணி. அதற்குரிய வலுவான போட்டியாக முன்பு இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இங்கிலாந்து அணியும் படுத்துவிட்டன. இந்நிலையில், தான் தான் கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்ற திமிரில் இருக்கிறது அவ்வணி. இது உலக ஒழுங்குக்கும் ஜனநாயகத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து. இந்நிலை தொடர விடக்கூடாது. அதற்குரிய தீர்வைப்பற்றி யோசிப்பதே இப்பதிவின் நோக்கம்.

இன்று அவுஸ்திரேலியாவைத் தோற்கடிக்கத்தக்க வலுவான அணியொன்றை உருவாக்க வேண்டிய தேவையிலுள்ளோம். அதற்கு இப்போதிருக்கும் சாத்தியமான வழி, அங்கங்கே சிதறிக்கிடக்கும் திறமைகளை ஒருங்கமைப்பது தான். ஆசியாவில் குறிப்பிடத்தக்க கிரிக்கெட் ஆளுமைகள் உள்ளனர் என்றாலும் ஒவ்வொரு நாட்டிலும் சிதறிக்கிடக்கின்றனர். அந்த நாடுகளை ஒன்றாக்கி வலுவான ஓர் அணியை உருவாக்கலாமென்று நினைத்தால் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைய முடியாதபடி அவர்களுக்குள் பிரச்சினைகள். அதைவிட ஒன்றோ இரண்டோ பேரைத்தான் பாகிஸ்தானிலிருந்து குறிப்பிட்டுப் பொறுக்கக்கூடியதாகவுமிருக்கிறது. எனவே சாத்தியமான வழி இலங்கையையும் இந்தியாவையும் இணைத்து ஒரு வலுவான அணியை உருவாக்குவது தான். ஏற்கெனவே டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவதாயிருக்கும் இந்தியாவும், ஒருநாள் தரவரிசையில் இரண்டாவதாயிருக்கும் இலங்கையும் இணைந்தால் அருமையான ஒரு கிரிக்கெட் அணி இந்த உலகுக்குக் கிடைக்கும். அத்தோடு அவுஸ்திரேலியாவின் கொட்டமும் அடங்கும்.உலக நன்மைக்காக இருநாடுகளை இணைத்து ஒரு நாடாக்குவது தப்பேயில்லை. வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் இணைப்புப் பற்றிக் கதைத்தால் பலர் ஏதோ தேசத்துரோகக் குற்றம் செய்தது போல பாய்ந்தடித்து வருகிறார்கள். பரப்பளவு ரீதியாகவும் சனத்தொகை ரீதியாகவும் இந்தியாவே பெரிய நாடாயிருப்பதால் இலங்கையை அதன் ஒரு மாநிலமாக அறிவிக்கலாம். ஏற்கெனவே முத்தையா முரளிதரன் இந்திய மருமகனாகிவிட்டார். நடிகர் விஜய் இலங்கை மருமகனாகிவிட்டார். இப்படி இரு முக்கிய புள்ளிகள் கலியாண சம்பந்தம் வைத்துக்கொண்ட இருநாடுகள் ஏன் ஒரு நாடாக மாற முடியாது? அப்படி நடந்தால் உலகில் வேறெந்த நாட்டாலும் அசைக்க முடியாத கிரிக்கெட் அணி எமக்குக் கிடைக்குமல்லவா?அவுஸ்திரேலியாவை வீழ்த்தக்கூடிய கிரிக்கெட் அணிதான் முக்கிய பலனாயிருந்தாலும் ஏனைய 'சிறுசிறு' பலன்களும் இந்த இணைப்பால் கிடைக்கும். ஆளாளுக்கு தமது நலனுக்காகச் சண்டை போடும் சேதுசமுத்திரத்திட்டம் ஒருநாட்டின் விருப்பப்படி நடக்கும். மன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்குப் பாலம் போட்டு சைக்கிள், மாட்டுவண்டியில் சென்று வரலாம். முக்கியமாக வண்டி கட்டிக்கொண்டு போய் சினிமாப்படம் கூடப்பார்த்து வரலாம். இலங்கையிற்கூட நல்ல “தரமான” சினிமாப்படங்களை எடுக்கலாம். அப்புறம் இணையத்தில் இந்தியன் ஈழத்தவனென்று நடக்கும் குடுமிச்சண்டை ஓய்ந்து நாமெல்லாம் 'ஒருதாய் வயிற்று' மக்களாக சந்தோசமாக இருக்கலாம். 'தொப்புட்கொடி' உறவுக்கதை பெரும்பாலும் ஓய்ந்துவிடும்.

இப்படி சில சில்லறை நன்மைகள் இருந்தாலும் அவற்றை விலாவாரியாகப் பிறிதொரு கட்டுரையில் எழுதலாமென்றிருக்கிறேன். அதற்குரிய தகவல்களும் ஆவணங்களும் நிறையத் தேவையாயிருக்கின்றன. வாற கிழமை சுப்ரமணிய சுவாமி லண்டன் வருகிறார். சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்திய இலங்கை இணைப்புப் பற்றி இன்னும் ‘ஆழமான’, ‘அறிவியற்பூர்வமான’ சிந்தனைகளையும் கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

அதற்குமுன் ஒரு போட்டி அறிவிப்பு.
இணையப் போகும் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வலுவான டெஸ்ட் மற்றும் ஒருநாட்போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியைத் தெரிவு செய்து (தனித்தனியே) பின்னூட்டமாகப் போடவும். எமது அமைப்பின் தெரிவோடு அதிகமாக ஒத்துப்போகும் அணியைத் தெரிவு செய்பவருக்குப் பரிசொன்று காத்திருக்கிறது.
-----------------------------------------------------

பலர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு,
“என்ன கனநாளாக் காணேல, நீங்கள் எழுதாமல் ‘போர்’ அடிக்கு" தெண்டு சொல்லீச்சினம்.
உடன் பிறப்புக்களே!
அமைப்பின் தீராத பணிகளுக்கிடையிலும் நேரமொதுக்கி உங்களுக்காக நிறைய விசயங்கள் எழுத வேணுமெண்டுதான் நினைக்கிறன். பணிகள் ஏராளமாகக் காத்துக்கிடக்கின்றன. இடைக்கிடைதான் இப்படி எழுத முடியும். இன்னும் சிறிதுகாலம் தான். எம் அமைப்பின் அடித்தளத்தைச் சரியாக இட்டுவிட்டு பின் உங்களோடு நிறைய நேரம் உறவாடுவேன்.
அதுவரை,

உடல் மண்ணுக்கு, உயிர் விண்ணுக்கு.

இப்படிக்கு,
தோழமையுடன்,
உம்மாண்டி. 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது