உடைவினதும் உருவாக்கத்தினதும் தொடக்கம்
இது வழமையான பதிவன்று
இப்போது தமிழ்மணத்திரட்டியில் ஏற்பட்டிருக்கும் பதிவுகளை நீக்கல் தொடர்பான சிக்கல் நல்லதா கெட்டதா என்று குழப்பமாகவிருக்கிறது. உண்மையில் இக்குழுமத்தின் உடைவு தொடங்கிவிட்டதா தெரியவில்லை. பி.கே. சிவகுமார் தன்னை இக்குழுமத்திலிருந்து தானே விலக்கிக் கொண்டதன் மூலம் இது தொடங்கிவிட்டதென்றே படுகிறது. இப்போது சடுதியான மாற்றங்கள் வராவிட்டாலும் தொடர்ச்சியான மனவருத்தங்கள், சண்டைகள் என்பவற்றின் இறுதியில் நிச்சயம் இப்பிளவு நடக்கத்தான் போகிறது.
ஏற்கெனவே பத்ரி எழுதிய காலம் நெருங்கிவிட்டதாகவே படுகிறது. இவ்வளவு விரைவில் அது நெருங்கியது எனக்கு அதிர்ச்சிதான்.
இயல்பாக, சுமுகமாக நடைபெற்றிருக்க வேண்டிய இந்த உடைவு வருந்தத்தக்க முறையில் மனஸ்தாபங்களுடன் நடந்துள்ளது. உண்மையில் குசும்பனின் பதிவு நீக்கப்படத் தேவையில்லாதது என்பதே என் ஆணித்தரமான கருத்து. குறிப்பிடப்படும் காரணத்துக்காகத்தான் அது நீக்கப்பட்டதாயின் அதைவிடவும் அக்காரணங்கள் பொருந்தக்கூடிய நிறையப் பதிவுகளை இனங்காட்ட முடியும். மதி கந்தசாமியை நக்கலடித்ததாக சிலர் சொல்லும் பதிவில் எரிச்சலோ கோபமோ கொள்ள என்ன இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. முதலில் மதிக்குக்கூட அப்படித் தோன்றியிருக்குமா என்றே சந்தேகமாயிருக்கிறது. மதச்சண்டைகள் நடக்கும் பதிவுகளை நிறுத்துவதுகூட எனக்கு உவப்பில்லாதது.
ஆனால் புதிதாக புதுக் குழுமங்கள் தோன்றுவதற்கு இது வித்திட்டால் நன்றுதான். மதக்கூட்டணிகள் ஒரு குழுமம், அறிவியற்பதிவுக் கூட்டணிகள் ஒரு குழுமம், நக்கலடித்தே காலத்தைப் போக்கும் விகடகவிகள் ஒரு குழுமம், தம் சொந்த அனுபவங்களை வைத்தே காலத்தை ஓட்டும் (ஆனால் சந்தேகமில்லாமல் அதிக ரசிகர்ளை வைத்திருக்கும் ஜனரஞ்சகக் குழுமம் இதுதான்) கூட்டம் ஒரு குழுமம், இனி அரசியலில் சண்டைபிடிக்கவென்று ஒரு குழுமம் என்று நிறையக் குழுமங்கள் தங்களுக்கெனத் தனித்திரட்டிகளை உருவாக்கிக் கொள்வது ஒரு வளர்ச்சி நிலைதான். இப்போதே தமிழ்மணக் குழுமத்தில் சந்தேகமேயில்லாமல் ரசிகவட்டங்களும், குழுமங்களும் உருவாகிவிட்டன. எல்லோரும் எல்லாருடைய பதிவுகளையும் படிப்பதில்லை. திரட்டியில் பெயரைப்பார்த்தவுடனேயே வாசிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இது கிட்டத்தட்ட தனித்திரட்டியின் தேவையை உரத்துச் சொல்வதாகவே இருக்கிறது.
இப்போதுள்ள தேவை முக்கியமானது. இப்போது தமிழ்மணத்திரட்டியின் குழுமம் உடையத் தொடங்கிவிட்டதென்பது உண்மையானால் புதுத் திரட்டிகள் உருவாக்கப்பட வேண்டும். இது ஒன்றுக்கொன்று பொறாமைப்படும் கோணத்திற் பார்க்காமல் இருக்கப்பட வேண்டும். ஆனால் இது எவ்வளவு சாத்தியமென்று படவில்லை. ஒரு குழுமத்தில் எழுதப்பட்ட பதிவை வைத்து இன்னொரு குழுமத்தில் எதிர்வினைக் கட்டுரை எழுதப்பட்டால் எத்தனை பேர் இதை ஆரோக்கியமாகப் பார்ப்பர் என்று தெரியவில்லை.
இப்போது புதுத்திரட்டிகளின் தேவை வந்துவிட்டால் அத்திரட்டிக்கான தொழிநுட்ப விசயங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கப்போவதுமில்லை. எனவே காசியோ அல்லது தமிழ்மணத்திரட்டியின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களோ அந்தத் திரட்டிச்செயலிக்கான அடிப்படைத் தொழிநுட்பத்தை வெளியிட முடிந்தால் அது பலனளிக்கும். இதைவைத்து அவரவர்கள் தாமே அவற்றை மேன்மைப்படுத்த முடியும். இந்தத் தொழிநுட்பம் வெளியிடுதலென்பது நிச்சயமாக நிர்வாகிகளின் சொந்த முடிவே. அதை வெளியிடத்தான் வேண்டுமென்ற நிலை அவர்களுக்கில்லை. தார்மீக அடிப்படையிற்கூட அதை வெளியிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்குமில்லை. ஆனால் அத்தொழிநுட்பம் வெளிவருவதூடாக (இது என்ன பெரிய விசயம், நோமலாச் செய்து போட்டுப் போயிடலாம் என்று சொல்பவர்கள் இருக்கலாம். எனக்கு அது புரியாத விசயம் தான்.) புதுப்புதுத் திரட்டிகள் தோன்றலாம். தோன்ற வேண்டும். இப்போது ஏற்பட்ட சிக்கலை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வோம்.
----------------------------------------------
நன்றி.
மறுபதிவிற் சந்திப்போம் (எமது பக்கமும் தூக்கப்படாமல் இருந்தால்).
இப்படிக்கு...
உம்மாண்டி.