குழம்பிய குட்டையில் மீன் பிடித்தல்
வலிக்கிறது முதுகு.
அங்கிங்கு என்றில்லாமல்
எங்கெங்கும் அடிவாங்கி
வலிக்கிறது முதுகு.
நாம் கல்லெறிந்தவர் மட்டுமில்லை,
போனவன் வந்தவன் எல்லாம்,
ஏன் போக்கிரிகூட கல்லெறிந்தான்
வலிக்கிறது முதுகு.
குழம்பிய குட்டையில்மீன் பிடித்ததாய்ச் சொல்லி
குற்றஞ்சாட்டுகிறது - எம்மைத்
தீதிலர் எனச் சொன்ன தரப்பு.
குழம்பிய குட்டையில் யார் மீன்பிடிப்பார்?
வயித்துக்கு வழியற்றவன்,
பசிபோக்க நாதியற்றவன்,
பிழைப்புக்குச் சரக்கின்றி –நடைப்
பிணமாக திரிபவன்.
எள்ளி நகைப்பவர் யார்?
சொல்லத் தேவையில்லை.
குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பவனைக்
குறை சொல்பவரே!
எள்ளி நகையாடுவோரே!
பசித்திருந்தால் தெரியும் உமக்கு.
குட்டை நாற்றமெடுத்தால்
மூக்கைப் பொத்தும்.
மீன்பிடிக்கும் எங்களை வையாதேயும்.
அதுசரி,
குட்டையைக் குழப்பியவனைக் கண்டிப்பீரா?
இல்லை வயிற்றுப்பாட்டுக்காக
குழம்பியதில் மீன்பிடிப்பவனை வைவீரா?
குறிப்பு:
இங்கே சரக்கில்லாமல் மீன்பிடிப்பவர்கள் என்பதை எழுதச் சரக்கில்லாதவர்கள் என்றோ, வேடிக்கை பார்ப்பவரை எழுதச் சரக்கிருக்கும் அல்லது எழுதிக்கிழிக்கும் மேதாவிகள் என்றோ நீங்கள் பொருள்கொண்டால் நாங்கள் பொறுப்பல்லர்.
(நாங்கள் என்னத்த எழுதினாலும் பிழையாப் பொருள் கொள்ளுறாங்களப்பா. )
-உம்மாண்டி-