ஈழப்பிரச்சினைக்கான தீர்வு -1
வலைப்பதிவாளருக்கு அழைப்பு.இது மிகவும் சிக்கலான கருதான். ஆனால் நிச்சயம் கலந்துரையாடப்பட வேண்டி கரு. இப்படியே இருப்போமானால் இந்த இனப்பிரச்சனைக்கு எப்படி முடிவு காண்பது?
ஆகவே உடனடியாக நாம் ஏதாவது செய்தே ஆகவேண்டிய தேவையில் இருக்கிறோம். ஆகவே இந்த வலைப்பதிவில் ஈழப்பிரச்சினைக்கான தீர்வைக்காணவும் அது பற்றி ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கவும் சகல வலைப்பதிவாளரையும் அழைக்கிறேன். முதலில் என் தீர்வைக் கூறுகிறேன்.
இதற்கான தீர்வென்பது மிகச்சுலபமானது. பக்கத்திலேயே தீர்வை வைத்துக்கொண்டு இவ்வளவுகாலம் ‘தேவையற்ற’ போரை நடத்திக்கொண்டுள்ளோம். முதலில் மனத்தில் சாந்தி வரவேண்டும். அமைதி குடிகொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது கூடாது. உணர்ச்சிவசப்பட்டு எங்கள் உரிமைகள் பறிபோகிறதென்று கூச்சல் போடக்கூடாது. எதையும் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். ஆசைகளை அடக்கப்பழகிக்கொள்ள வேண்டும். குறிப்பாக எங்களுக்கும் மற்றவன்போல் சலுகைகள் (இதை உரிமைகள் என்றும் சிலர் சொல்வர்) வசதிகள் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் ஆசை கொள்வதும் தவறான மனப்பான்மை.
இவ்வளவு பண்புகளையும் தமிழ் மக்களிடம் கொண்டுவரவேண்டும். அதை ஆன்மீகத்தால் மாத்திரமே செய்ய முடியும். மக்களை ஆன்மீக வழியில் நடத்திச்செல்ல உரிய தலைமை தமிழர்களிடம் இப்போது இல்லை. கம்பன் கழகமூடாகச் செய்யப்பட்ட அத்திருப்பணியும் சில புல்லுருவிகளால் இடைநிறுத்தப்பட்டது. இப்போது அவர்கள் கொழும்பில் செயற்படுவதைக்கூட பொறுக்க முடியாமல் அவர்களுக்குக் கல்லெறிய வேண்டுமென்று கொக்கரிக்கிறார்கள். அவர்கள் திருப்பணி செய்யும் கொழும்பில் ஏதாவது பிரச்சினையுள்ளதா? போராட வேண்டிய தேவையுள்ளதா? மக்கள் துன்பப்படுகிறார்களா?
இல்லையே. எல்லோரும் சுமுகமாகத்தானே வாழ்கிறார்கள். அதுபோல் வடக்குக் கிழக்கிலும் தமிழ் மக்களிடம் ஆன்மீகத்தை விதைக்கக்கூடிய அமைப்புக்கள் தோன்ற வேண்டும். அதற்கான ஏதுநிலைகள் தற்போது தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது மகிழ்ச்சிகரமான செய்தி.
திருகோணமலையிலும் ஓமந்தையிலும் புத்தர் சிலைகள் தோன்றுவது நல்ல அறிகுறி. தமிழர்களை ஆன்மீகம் நோக்கியும், முதற்பந்தியில் நாம் கூறிய குணங்களை அம்மக்களிடத்திற் கொண்டு வருவதற்காகவும் இந்தப் புத்தர் சிலைகள் அரும்பங்காற்றும் என்று நாம் அனுமானிக்கிறோம். உண்மையில் தமிழர்களுக்கு இருக்க வேண்டுமென்று மேலே நாம் கூறிய அனைத்தும் மக்களிடம் போய்ச் சேர சிறந்த ஊடகம் புத்தமதம் என்பது எம் நிலைப்பாடு. புத்தர் தான் ஆசையைத் துறக்கச்சொன்னார். அவரின் வழியில் சென்றால் எந்தப்பிரச்சினையையும் தீர்த்துவிடலாம். இலங்கைப்பிரச்சினைக்கு பௌத்தம் தான் காரணம் என்று பலர் பசப்புகிறார்கள். உண்மையில் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க புத்த மதமே சிறந்தவழியென்பது எம் முடிவு.
பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது? கொஞ்சப்பேர் புத்த மதம் அல்லாதவர்களாக இருப்பதால் தானே? அனைவரும் புத்த மதத்தைத் தழுவிவிட்டால்?..
யோசித்துப்பாருங்கள், ஏதாவது பிரச்சனை இலங்கையில் வருமென்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. அனைவரும் புத்தமதத்தைத் தழுவிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சினையென்ற கதைக்கே இடமில்லை. அதன்பிறகு உரிமைப்பிரச்சனையெல்லாம் இருக்காது. ஆசைகள் இருக்காது. எல்லோரும் சந்தோசமாக இருக்கலாம். எமக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து நிம்மதியாக இருக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம், இணையம் வழியே அலட்டலாம், எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கும், நல்ல வீதிகள் போடப்படும், எல்லோரும் சினிமா பாக்கலாம். எவ்வளவு அனுபவிக்கலாம். (இதையெல்லாம் ஆசை என்று சொல்ல முடியாது.)
இப்போது திருகோணமலையிலும் ஓமந்தையிலும் தோன்றிய புத்தர் சிலைகள் வடகிழக்கின் ஏனைய பகுதிகளிலும் தோன்ற வேண்டும். (இவை புத்தபெருமானால் தான் நிறுவப்படுகின்றன என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதால் நான் அதைச் சொல்லவில்லை).
இந்த வழிமுறைமூலம் ஏனையோரையும் புத்த மதத்தைத் தழுவச்செய்வதன் மூலம் பல தசாப்தங்களாக நிலவிவரும் கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், இனப்பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு காணமுடியும்.
எனவே இப்போது நாம் செய்யவேண்டிது, புத்தர்சிலைகள் அமைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதும், அனைவரையும் புத்த மதத்துக்கு மாறச்சொல்லி பரப்புரை செய்வதும் தான். சுனாமிப் பொதுக்கட்டமைப்பைவிட முக்கியமான பணி இவைதான். இவ்வளவுகாலமும் எமது சக்தியையும் நேரத்தையும் வீணடித்தது போதும். இனியும் உறங்க முடியாது. இவ்வளவு சுலபமான வழிமுறையிருக்க, எங்கெல்லாமோ தீர்வு தேடி அலைகிறோம்.
புத்தர்சிலை தோன்றுவதைப்பற்றி நான் சொன்னது பலருக்குப்பிடிக்காமலிருக்கலாம். எமது சகோதர இணையத்தளமான தேனி இது பற்றிக் கட்டுரையொன்று எழுதியுள்ளது. பாசிசப் புலிகளிடமிருந்து தம்மைப்பாதுகாக்கவே திருமலைத் தமிழ் மக்கள் புத்தர் சிலையிடம் சரணடைகிறார்கள் என்றும், புத்தர் சிலைக்கு எதிரான போராட்டமென்பது புலிகளின் பிரச்சாரமேயொழிய எந்தத் தமிழ்மகனுக்கும் புத்தர் சிலையை எதிர்ப்பதில் சற்றும் விருப்பமில்லையென்றும் அதில் ஆணித்தரமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே புத்தர் சிலையமைப்பதை எதிர்ப்பது புலிகள் தாம், மக்களல்ல என்பதைப் புரிந்துகொண்டீர்களென்றால் நான் கூறிய ஆலோசனையிலுள்ள சாத்திப்பாடும் உண்மையும் புரியும்.
இது சம்பந்தான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
சாத்தியப்பாடான மேலுமொரு தீர்வு பற்றி நாளை எழுதுவேன். அது தனியே ஈழப்பிரச்சினைக்கு மட்டுமன்றி உலகம் முழுவதுக்குமான பல சிக்கல்களைக்கும் தீர்வாக அமையுமென்று நம்புகிறேன்.
அதைப்பற்றிப் பிறகு.
பாசமுடன்,
-குட்டான்-