கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்.
பாசிசப்புலிகளின் மற்றுமொரு காட்டுமிராண்டி நடவடிக்கை.கூகிள் ஏர்த் எனப்படும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிவீர்கள். உலகில் நாம் விரும்புமிடத்தைத் துல்லியமாகப் பார்க்கும்படி அதில் வசதியுள்ளது. வாகனங்கள், வீடுகள், மரங்கள்கூடத் தெளிவாகத் தெரியும்படி பல பகுதிகள் துல்லியமாகக் காண்பிக்கப்படுகின்றன.
இம்மென்பொருள் கொண்டு இலங்கைத் தீவையும் நாம் பார்க்கலாம். அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் பல இடங்களை எந்தவிதத் தடையுமின்றி மிகத் தெளிவாக நாம் காணலாம். கொழும்பின் முக்கிய கட்டடங்கள், கொழும்புத்துறைமுகம், இராணுவ நிலைகள், வான்படை முகாம், திருகோணமலைத் துறைமுகம் என்பன போன்று அதியுயர் இரகசிய இடங்களைக்கூட மிகமிகத் தெளிவாக நாம் பார்த்துக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணப்பக்கம் போனீர்களென்றால் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானப்படைத்தளம் முதற்கொண்டு அனைத்தும் மிகத்தெளிவாகத் தெரிகின்றன. அதாவது அரசின் இரகசிய இடங்களைக்கூட கூகிள் தணிக்கை செய்யவில்லை. மிகத்தெளிவாக அனைத்தையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.
ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியைப் பார்ப்போம் என்று நீங்கள் யாராவது முயன்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் வவுனியா மாவட்டத்தின் சிலபகுதிகளும் காட்டப்படுகின்றன. ஆனால் வன்னியின் புதுக்குடியிருப்பை உங்களால் பார்க்க முடியாது. சுண்டிக்குளம், வெத்திலைக்கேணி, கட்டைக்காடு உட்பட முக்கிய கடற்கரைப்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. (முக்கியமான கடற்புலிகளின் பகுதிகள்). விசுவமடு உட்பட பல இடங்களை உங்களால் பார்க்க முடியாது. கிளிநொச்சி நகர்ப்பகுதியை மையமாக வைத்து பெரும்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. இத்தாவில், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என்று புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகள் உள்ள எந்தப்பகுதியையும் உங்களால் பார்க்க முடியாது.
ஆம். மேற்கண்ட அனைத்துப்பகுதிகளும் கூகிள் ஏர்த் மென்பொருளில் மறைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் யாழ்.கோட்டைப் பகுதியை அண்டிய சிறுபகுதி மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. (ஆனால் காங்கேசன்துறை, பலாலி, காரைநகர் போன்றன மிகத்தெளிவாகக் காட்டப்படுகின்றன). அதைவிட தென்மராட்சியில் இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளும் மறைக்கப்பட்டுள்ளன. அவைகூட புலிகளின் பகுதிகளை மறைக்க முற்பட்ட வேளையில் சேர்ந்து மறைக்கப்பட்டவையே என்று கருத இடமுண்டு.
இதன்மூலம் புலிகள் கூகிள் ஏர்த் மெல்பொருள் வல்லுநர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது. பாசிசப்புலிகள் உலகில் எவரையும் விட்டுவைப்பதில்லை. எங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டத் தவறுவதில்லை. அரசபடையின் அதிமுக்கியமான இடங்களே எந்த மறைப்புமின்றி துல்லியமாகக் காட்டப்படும்போது புலிகளின் தளங்கள், நிலைகள், கடற்கரைகள் மட்டும் மறைக்கப்படுவதன் மர்மம் என்ன?
இதைப்பற்றி கூகிள் நிர்வாகம் எதுவும் சொல்லப்போவதில்லை. அவர்களை வெருட்டி வைத்துள்ளனர் நாசகாரிகள். ஜனநாயக வாதிகளான நாங்கள்தான் இவற்றையெதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். மக்களை அணிதிரட்டி மக்கள் புரட்சிமூலம் கூகிள் ஏர்த்தைக் காப்பாற்ற வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சிமூலம் பாசிசத்தை ஒழிக்க வேண்டும். இதற்கான செயற்றிட்டம் எம்மிடமுண்டு.
எம்மோடு தோள்கொடுக்க நினைக்கும் மக்கள் போராளிகள், புரட்சியாளர்கள், ஜனநாயகக் காவலர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.
"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட
போரிடும் புலிகளை வேரொடு சாய்ப்போம்"
(கூகிள் ஏர்த் பற்றிய எமது குறிப்பில் நம்பிக்கையில்லாதவர்கள் தயவுசெய்து நாம் சொன்ன இடங்களைத் தேடிப்பாருங்கள். அதன்பின் எம்மோடு போராட்டத்தில் இணையுங்கள்.)
-உம்மாண்டி-
ஏன் எழுதுவதில்லை?
"
மிளகாய் அரைப்பு" என்ற தலைப்பில் கடந்த பதிவாக நாமிட்டிருந்த கவிதைக்குப் பின்னூட்டமளித்த டி.சே. தமிழன் அவர்கள்,
"என்னடாப்பா, பெடியங்களை முடக்கிட்டாங்கள்/ முடங்கிப்போட்டாங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இப்ப திருப்ப வெளிக்கிட்டிட்டாங்கள் போல :-) "
என்று கேட்டுப் பின்னூட்டமிட்டிருந்தார். (அவர் மட்டுமே பின்னூட்மிட்டிருப்பதால் மற்றவர்க்குக் கவிதை புரியவில்லையென்று நினைத்துக் கொண்டு, எம் கவிதை உயர்ந்த தளத்தைச் சேர்ந்ததென்று உறுதிப்படுத்திக் கொண்டோம்.)
அவருக்குச் சொல்லக்கூடிய சாத்தியமான சில பதில்கள் எம்மிடமுண்டு.
ஈழத்தில் தமிழர்கள் மீதான படுகொலையை எதிர்த்து நாங்கள் எங்கள் எழுத்தை நிறுத்தினோம் என்று சொல்லலாம். கவனிக்க கடந்த மாவீரர் நாளுக்குக் கருணாவின் உரைக்குப் பின் எந்தப்பதிவும் இடவில்லை. (உண்மையில் எழுத்துரிமைக்கு எழுத்தை நிறுத்தினால் உயிர் போனதுக்கு உயிர்தானே நிறுத்தவேணும் என்ற குரல் வருவது புரிகிறது. என்ன செய்ய? எங்கள் இயக்கத்தில் யாரும் தற்கொலைக்குத் தயாரில்லை. எல்லாம் வாய்ச்சவடால் பேர்வழியாக இருக்கிறார்கள்.)
அதைவிட்டு உண்மையானதும் அதிகம் பொருந்தக்கூடியதுமான ஒரு காரணத்தைச் சொல்கிறேன்.
எங்கள் தரம் வேறு உங்கள் தரம் வேறு. அதனால் உங்கள் தரத்துக்கு இறங்கி எங்களால் வண்டில் விட்டுக்கொண்டிருக்க முடியாது. எங்கள் எழுத்தை வாசிக்க, புரிந்துகொள்ள நீங்கள் எங்கள் தரத்துக்கு வளரவேண்டும். எனவேதான் உங்கள் தரத்துக்குக் கீழிறங்கி எழுதுவதைத் தவிர்த்து வருகிறோம்.
ஆனாலும் என்ன செய்ய?
இதைச் சொல்வதற்கு உங்கள் தரத்துக்கு இறங்கி வந்துதானே சொல்லவேண்டியிருக்கிறது?
எனவே அடிக்கடி பீடத்திலிருந்து இறங்கிவருவோம்.
அண்மையில் வந்ததுகூட பெரியபெரிய தலைகளிற்கூட மிளகாய் அரைபடுவதைப் பார்த்த பரிதாபத்தில் வந்து கவிதை சொல்லவே.
நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
-உம்மாண்டி-
மிளகாய் அரைப்பு
உறைக்கிறது தலை.
யாரோ ஒருவனின் அரைப்புக்கு
அம்மியாயின எங்கள் தலைகள்
உச்சியிலடித்த உறைப்பு
தெரிந்த பின்னும்
சேர்ந்தே அரைப்பர் சிலர்
அறியாமல் அரைபடும் தலைகளுக்கு
ஆழ்ந்த அனுதாபங்கள்
-உம்மாண்டி-

பட உதவி: மகிழன்
அம்மிக்கும் குழவிக்கும் அவ்விரு கைகளுக்கும் நன்றி.