வீரவணக்கம் - சங்கர்ராஜி
ஈழத்துத் தோழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஈரோஸ் EROS இயக்கத்தின் இராணுவத் தளபதி சங்கர்ராஜி அவர்கள் ஜனவரி மாதம் 10 ம் திகதி மாரடைப்பினால் மரணமானார். கொள்கை வேறுபாடுகள் பல இருந்தாலும், கருத்து முரண்பாடுகளும் அதனால் உண்டான மனக்கசப்புகளும் இருந்தாலும் ஈழத் தோழர்களின் போராட்டத்தில் மறக்க முடியாத ஒருவராக தன்னை ஆக்கிக்கொண்ட சங்கர்ராஜி என்கிற அந்த விடுதலைப் போராளிக்கு நாமும் எமது இயக்கத்தின் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.சங்கர்ராஜி
ஈரோஸ்(EROS) சங்கர் எனவும், சங்கர்ராஜி எனவும் இலங்கை அரசியலில் நன்கு அறியப்பட்ட இவரது மரணம் எம்மை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி இலங்கையில் பிறந்த இவர், அங்கிருந்து இலண்டனுக்கு இடம்பெயர்ந்து தனது கல்வியைக்கற்று, பின் FORD நிறுவனத்தில் பொறியியலாளராக கடமைபுரிந்து வந்த இவர், 1976 முதல் அரசியலில் நுளையத் தொடங்கியிருந்தார். அன்று முதல் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாகத் தடங்களைப் பதிந்து வந்த வேளை சனவரி மாதம் 10ம் திகதி அன்று மாரடைப்பினால் மரணமான செய்தி எம்மை துன்பத்திற்கு உள்ளாக்கியது. இவரது வாழ்வின் சுமார் 30 வருட காலம் இலங்கை அரசியல் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதில் எதுவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. இத்தருணத்தில் அவரது கடந்த கால அனுபவங்களிலிருந்து அவசியமான பக்கங்களை இங்கு நினைவுகூர வேண்டிய கடமைக்கு நாம் உள்ளாகியுள்ளோம்.
1970 களில் இனவாதத் தரப்படுத்தல் மேலோங்கி நின்ற வேளை இலங்கையில் இருந்து தமிழ் இளைஞர்கள் இடம் பெயர்ந்து இலண்டன் நோக்கி புறப்பட்டிருந்த காலமது. எமது சமுதாயம் கொழும்பு பொருளாதாரத்தை மையமிட்ட தன் செயற்பாடுகளுக்கு மாற்றீடாக ஐரோப்பிய பொருளாதாரம் நோக்கி தன் மையத்தை இடம்பெயர வைத்த நேரமது. எமது தேசிய இனமானது தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி அதற்கான கருவடிவங்களை உருவாக்கி வந்திருந்த வேளையில் இலங்கையிலும், இங்கிலாந்திலும் போராட்டம் குறித்தான சிந்தனைகள், அணுகுமுறைகள், அமைப்புகள் உருவாகத் தொடங்கியிருந்தன. புலம்பெயர்ந்து வந்தவர்கள் மீண்டும் தம் தாய்நாடு சென்று அடக்கு முறைகளை எதிர்கொண்டு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த நிலையில் ஈரோஸ் இயக்கம் இரட்னசபாவதி அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது. இவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சங்கர்ராஜி அவர்கள் 1976 முதல் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தயாரானார். அகிம்சைவழி போராட்டத்தின் அஸ்தமனத்தை புரிந்துகொண்ட ஈரோஸ் இயக்கம் ஆயுதப்போராட்டத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தி வந்தது. சங்கர்ராஜி அவர்கள் இராணுவப்பயிற்சி நெறிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தயாரானார். இவ்வாண்டில் லெபனான் நகருக்குச் சென்று அங்கு யாசிர் அரபாத் தலைமையிலான „பத்தா“(FATAH) அமைப்பின் இராணுவப்பயிற்சியை பெற்றுக்கொண்டார். சங்கருக்கு போரியல் உபாயங்கள் பற்றியும் இராணுவக்கட்டமைப்புகள் பற்றியும் மற்றும் அரசியல் இராணுவ துறைசார்ந்த திட்டமிடல்கள் பற்றியும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அப் பயிற்சி நெறிகளை "பத்தா" அமைப்பின் இராணுவத்தளபதியாக இருந்த அமரர் அபு.ஜிகாத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர் பெற்றுக்கொண்டது இவர் வாழ்க்கையின் ஒரு சிறப்பு அம்சமாகும். இவரது லெபனான் பயணம் பற்றியும், பயிற்சிகள் பற்றியும், அனுபவங்கள் பற்றியும் அபு.ஜிகாத் அவர்களது மறைவை ஒட்டி எழுதிய நூலில் சங்கர் அவர்கள் பல விடயங்களை எமக்கு அறியத்தந்துள்ளார். „எந்த வகைப் போராட்டத்திற்கும் முதலில் உங்கள் பலத்தை நீங்கள் நம்பவேண்டும்“ என்ற அபு.ஜிகாத் அவர்களது வாக்கியத்தை நினைவு கூர்ந்து அதன்படி செயல்பட முன்வந்தவர் சங்கர்ராஜி ஆவார்.
இவரது ஆழுமையின் கீழ் ஈரோஸ் இயக்கமானது தனது செயற்பாடுகளை வெளிநாடுகளிலும், தமிழகத்திலும், ஈழத்தின் பலபாகங்களிலும் மேற்கொள்வதற்கான முடிவுகளைப் பெற்றிருந்தது. இதன்படி ஈழத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு தயாரான நிலையில் இருந்த இளைஞர்களுக்கு லெபனான் பயிற்சி வாய்ப்பை வழங்கும் முடிவை மேற்கொண்டிருந்தது. இம் முடிவை செயற்படுத்துவதற்காக சங்கர்ராஜி அவர்கள் ஈழத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். இலங்கை சென்றவர் 1977 இல், அன்று புதிய தமிழ்புலிகள் என்ற பெயரில், அதற்கு தலைமை தாங்கி நெறிப்படுத்தி வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சந்தித்து இப்பயிற்சி உதவிபற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். பேச்சுவார்த்தையின் பலனாக புதிய தமிழ்ப்புலிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பப்பயிற்சிகள் லெபனானில் வழங்கப்பட்டிருந்தன.
1977 இல் இலங்கையில் பாரிய கலவரமானது மூண்டபோது இலங்கைப் பிரச்சினையானது சர்வதேசம் எங்கும் அறியப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஈரோஸ் இயக்கம் 1978 இல் வவுனியாவிற்கு அருகில் கண்ணாட்டி என்னும் இடத்தில் „கூட்டுப் பண்ணை“ ஒன்றை அமைத்து தனது பொதுவுடமை கருத்தின் மாதிரி வடிவம் ஒன்றை ஸ்தாபித்திருந்தது. இப்பண்ணையில் சங்கர்ராஜி அவர்கள் தனது பயிற்சி மற்றும் அனுபவங்களை புதிய ஈரோஸ் உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். பின்னர் பண்ணையானது சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சங்கர்ராஜி அவர்கள் இலங்கை அரசின் தேடப்படும் நபர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். அக்காலம் முதல் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஆரம்பமாகியிருந்தது. ஆயினும் அவற்றை துச்சமென மதித்து அவர் தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.
1980 களில் ஈரோஸ் இயக்கமானது கட்சிப்பிளவு ஒன்றை சந்தித்திருந்தது. இக்கட்சிப்பிளவின் போது இலங்கைக்கு மீண்டும் வந்திருந்த சங்கர்ராஜி அவர்கள் அப்பிளவை தடுக்கும் முகமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இருக்கவில்லை. ஈரோஸ் அமைப்பின் தலைமைத்துவம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிலர் பிரிந்து சென்று EPRLF என்னும் பெயரில் புதிய அமைப்பு ஒன்றை ஸ்தாபித்துக்கொண்டனர். எப்போதும் தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டுவதில் முன்நின்று உழைத்த சங்கர்ராஜி அவர்கள் இப்பிளவு குறித்து மிகவும் மனம் வருந்திய நிலையிலேயே காணப்பட்டிருந்தார்.
1983இல் மீண்டும் இனக்கலவரமானது பாரிய அளவில் இலங்கையில் தோன்றிய போது இந்தியாவின் தலையீடும் புதிய பரிமாணத்தில் உதயமாகியிருந்தது. இந்த அரசியல் பாய்ச்சலைக் கருத்தில் கொண்டு சங்கர்ராஜி அவர்கள் இலண்டனிலிருந்த தன் இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். அங்கிருந்தபடியே ஈரோஸ் அமைப்பின் தலைமைத்துவத்தின் முடிவுகளை செயற்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
இக்காலங்களில் பெருமளவு உறுப்பினர்கள் பயிற்றுவிக்கப்பட்டு ஸ்தாபனமயப்படுத்தப்பட்டனர். 1984 இல் சென்னையில் கூடிய ஈரோஸின் மத்திய குழுவானது ஈழத்திலும், வெளிநாடுகளிலும் எங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புக்களை நிறுவியிருந்தது. இவ்வேளை ஈரோஸ் அமைப்பின் இராணுவத் தளபதியாக இவர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவரது நெறிப்படுத்தலின் கீழ் இராணுவ தந்திர உபாயங்களும், இராணுவரீதியான செயற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டன. தென்னிலங்கையில் பொருளாதார இலக்குகளை நோக்கிய தாக்குதல்களுக்கும், வடகிழக்கில் தற்காப்பு ரீதியிலான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இவர் தனது நெறிப்படுத்தலை மேற்கொண்டிருந்தார். இவரது நெறிப்படுத்தலில் வடகிழக்கிலும், மலையகப்பகுதிகளிலும், கொழும்பிலும் ஈரோஸ் இயக்கம் வேகமாக காலூன்றத் தொடங்கியது. இக்காலங்களில் இராணுவத்துறையை மட்டுமல்லாது நிதி மற்றும் சர்வதேச தொடர்புகளையும் சுமந்தவராக சங்கர்ராஜி அவர்கள் காணப்பட்டார். பாரிய பொறுப்புக்களை சுமந்ததின் நிமித்தம் பல்வேறு வசைமொழிகளுக்கும் ஆளானார். இராணுவச் செயற்பாடுகளில் இவர் களம் காணாதவர் என்ற குற்றச்சாட்டுக்கு இவர் இலக்கானார். ஈழத்தில் செயற்பட்டு வந்த தோழர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப இவர் 1986 இல் ஈழம் வந்து கொழும்பு வரை சென்று களநிலைகளை சந்தித்துச் சென்றார்.
1985 இல் இந்திய அரசு ஈழத்தமிழர் விவகாரத்தில் புதிய அணுகுமுறை ஒன்றை கொண்டு வந்தது. தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசுடன் பேசவைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளை ஈரோஸ் அமைப்பின் சார்பாக சங்கர்ராஜி அவர்களின் தலைமையிலான குழு இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டிருந்தது. திம்புப் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏகமனதாக ஒரு பொதுநிலையை எய்தி நான்கு அடிப்படை அம்சங்களில் இலங்கை அரசிற்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இக்காலத்தில் சங்கர்ராஜி அவர்கள் இயக்க ஐக்கியம் குறித்தான அவசியத்தை எண்ணக்கருவாக கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தார். சில மாதங்களின் பின்னர் திம்புப் பேச்சுவார்த்தையானது முறிவடைந்த பின்னர் மீண்டும் ஈழத்தில் யுத்தம் ஆரம்பமாகியிருந்தது.
1986 களில் இந்திய அரசானது விடுதலை இயக்கங்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஒன்றை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையை அணுகுவது என்ற அடிப்படையில் அவர்கள் செயற்பட முடிவு செய்தனர். இதன்படி 1986 இல் பெங்களூரில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் பேச்சுவார்த்தையானது இந்திய அரசின் அனுசரணையில் நடைபெற்று இருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழீழ விடுதலைப் புலிகளினூடாக அணுகி தீர்வு ஒன்றைக் காண்பது என்ற இந்தியாவின் புதிய நிலைப்பாடானது மாற்று இயக்கங்கள் மத்தியில் குழப்பங்களை தோற்றுவித்திருந்தது.
இவ்வேளையில் ஈரோஸ் இயக்கமானது இவ்வணுகுமறையை ஆதரித்து செயற்பட தீர்மானித்திருந்தது. இது தொடர்பாக சங்கர்ராஜி அவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இருக்கும் தேசிய தலைமையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டதன் வைபவமாக இச் சம்பவத்தை வர்ணித்து, இனி வரும் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்து தீர்வுகளை காண விளைவதை தாம் ஆதரிப்பதாக கருத்துக்கூறியிருந்தார். இவ்வேளை இது ஒரு பாரிய பொறுப்பென்றும் ஏனைய சக போராட்ட அமைப்புக்களை தனது தலைமையின் கீழ் இணைத்து செயற்படும் பக்குவம் இவ்வமைப்புக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். ஈரோஸ் இயக்கத்தின் இம்முடிவு மாற்று இயக்கங்களுக்கு ஈரோஸ் மீது வெறுப்பையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருந்தது. 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தமானது ஏற்பட்ட போது மீண்டும் இலங்கை அரசியலில் அனர்த்தங்கள் நிகழத் தொடங்கின. இலங்கை-இந்திய ஒப்பந்தமானது இலங்கை மக்களுக்கு இடைக்கால தீர்வை முன்மொழிந்து அதனை விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நிறுவ ஆவன செய்திருந்தது. இவ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை சங்கர்ராஜி அவர்கள் ஆதரித்து செயற்பட்டமை ஈரோஸ் இயக்கத்தின் இராணுவ – அரசியல் துறை சார்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விரக்தியையும் கசப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் இனிமேல் அமைதி நிரந்தரமாக நிலவும் என அதீத நம்பிக்கை கொண்டு இவர் செயற்பட்டதன் விளைவாக பல எதிர்ப்புக்களை சந்திக்கும் நிலமைக்கு உள்ளாகியிருந்தார். இது அவருக்கு பெரும் சோதனைக்காலமாக அமைந்திருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜேவர்த்தனா சூழ்ச்சியோடு தனக்கு சாதகமாக கையாண்டதன் விளைபலனாக இந்தியஅரசு இலங்கை தமிழர்களை பகைத்துக் கொண்டது. அமைதி காக்க வந்த இந்தியப்படைக்கும் - விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்த நிலை உருவானபோது மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கைத்தமிழர் இந்தியா குறித்து அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.
நெருக்கடி மிகுந்த இச் சூழ்நிலையில் ஈரோஸ் இயக்கம் மிருசுவிலில் தன் திட்ட பிரகடன மகாநாட்டை ஆரம்பித்திருந்தது. அம்மகாநாட்டில் ஆயுத ஒப்படைப்பு குறித்து தான் பெற்ற முடிவை தவறானது என்று ஒப்புக்கொண்ட தோழர் சங்கர், இது குறித்து வருத்தம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு விடயங்களிலும் தனது நம்பிக்கை கருத்துக்களை முன்மொழிந்திருந்தார். பல்வேறு அரசியல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட இம்மகாநாட்டின் இறுதியில் மீண்டும் ஈரோஸ் தோழர்களினால் சங்கர்ராஜி அவர்கள் இராணுவத் தளபதியாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 பெப்ரவரியில் இலங்கையில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் ஈரோஸ் இயக்கம் 13 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியிருந்தது. இந்திய அரசினால் நிறுவப்பட்ட மாகாண சபையின் செயற்பாடுகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது அமைந்திருந்தது.
இவ்வெற்றியின் பின்னர் கொழும்பில் சங்கர்ராஜி தலைமையில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று நடத்தப்பட்டிருந்தது. ஈரோஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை சங்கர்ராஜி அவர்கள் தெளிவுபட கூறியிருந்தார். இந்திய இராணுவமானது யுத்தத்தை நிறுத்தி அமைதியான ஒரு சூழ்நிலையில் விலகலை செய்வதற்கான ஒரு கால எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார். இந்திய இராணுவமானது 1990 இன் ஆரம்பத்தில் வெளியேறிய பின்னர் ஈரோஸ் பல்வேறு உள்நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கியிருந்தது. இயக்கத்தின் உள் முரண்பாடுகளினால் தனிப்பட்ட முறையில் பாதிப்படைந்த அவர் அரசியல் முன்னெடுப்புகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தார். இக் காலகட்டங்களில் அவர் சென்னைக்கு இடம் பெயர்ந்திருந்தார்.
1990 இன் நடுப்பகுதியில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டபோது ஈரோஸ் இயக்கத்தின் பொதுச்செயலாளராக விளங்கிய பாலகுமாரன் ஈரோஸின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக பத்திரிகைகளுக்கு அறிவிப்பு செய்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மலையகப் பகுதிகளிலும் செறிந்து இருந்து செயற்பட்டு வந்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தினரால் மோசமான பாதிப்பிற்கும், உயிர் ஆபத்துக்கும் உள்ளாகியிருந்தனர். இவ்வேளை மீண்டும் சங்கர்ராஜி அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தார்.
மலையகம் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி செயற்பட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். சிறை வைக்கப்பட்டிருந்த இவ்வுறுப்பினர்களை விடுவிக்கவும், அரசியலில் இருந்து ஒதுங்கி நாட்டைவிட்டு வெளியேற தயாரான உறுப்பினர்களுக்கு உதவும் முகமாகவும் கொழும்பில் மையமிட்டு தன் செயற்பாடுகளை அவர் ஆரம்பித்திருந்தார். இக்காலங்களில் சங்கர்ராஜி அவர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் பத்திரிகைகளால் அரசசார்பு நபராக வர்ணிக்கப்பட்டார். கொழும்பில் தங்கியிருந்த இக்காலங்களில் விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் தொடர்புகளை பேணி ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத்திற்கு அயராது உழைத்து வந்தார். இவரது முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்காத நிலையில் மீண்டும் மனவிரக்தியுடன் சென்னைக்கு திரும்பி அங்கு தங்கியிருந்தார். தன் அரசியல் செயற்பாடுகளை கட்டுப்படுத்திக் கொண்ட அவர் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002ம் ஆண்டு பெப்ரவரியில் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஐக்கியம் பற்றிய இவரது எண்ணங்களுக்கு விடை கிடைக்கும் என ஏங்கி நின்றார். அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்ற அவரது விருப்பம் ஈடேறியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் மத்தியில் மாற்றியக்கங்கள் தொடர்பாக ஏற்பட்ட கொள்கை மாற்றத்தை வரவேற்ற அவர் அனைவரையும் ஒன்று திரட்டி செயற்படுத்தும் காலத்திற்காக ஏங்கி நின்றார். இறுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் புனர்வாழ்வு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தயாரானார். இப்பேரழிவில் சிக்குண்ட தமிழ்ச் சமூகத்தை உறுதியான பொருளாதாரத் திட்டங்கள் மூலம் மீண்டும் கட்டியெழுப்ப தன்னார்வம் கொண்டிருந்தார். அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிபந்தனையற்ற முறையில் செயற்பட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால்… அவரது உடல்நிலை அவரது ஆயுளை துரிதப்படுத்தியது. நீரிழிவு நோயாலும், இரத்தக் கொதிப்பினாலும் பல ஆண்டுகளாக அவஸ்தைப்பட்டு வந்த இவர் 10.01.2005 அதிகாலையில் தன் தாய்மடியில் மாரடைப்பால் மரணமானார்.
சுமார் முப்பதாண்டு கால அரசியல் வரலாறு கொண்ட சங்கர், அறிந்தவர்களுக்கு அரசியல் நல்வழிகாட்டியாகவும், அறியாதவர்களுக்கு சர்ச்சைக்குரிய நபராகவும் விளங்கியவர் என்பதே யதார்த்தம்.
வீரவணக்கத்துடன்
பெடியன்'கள்